இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், பரிசாக கிடைத்த நெக்லசை சட்டவிரோதமாக விற்றதாக கூறப்படும் புகார் பற்றி, எப்.பி.ஐ., எனப்படும் பெடரல் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சி, விசாரணையை துவக்கிஉள்ளது.
பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கானுக்கு அளித்து வந்த ஆதரவை எம்.பி.,க்கள் சிலர் வாபஸ் பெற்றதால், அவரது அரசு சமீபத்தில் கவிழ்ந்தது. அவர் பிரதமராக இருந்த போது, பரிசாக வந்த நெக்லசை, ௧௮ கோடி ரூபாய்க்கு விற்றதாக இம்ரான் கான் மீது புகார் கூறப்பட்டது.
இதுபற்றி விசாரிக்க, எப்.பி.ஐ.,க்கு பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டது. இதையடுத்து தன் விசாரணையை, எப்.பி.ஐ., துவக்கியது. பாகிஸ்தானில் பிரதமராக இருப்பவர், தனக்கு வரும் பரிசுப்பொருட்களை அரசு கருவூலத்தில் சேர்க்க வேண்டும். அதை மீறி, பரிசாக வந்த நெக்லசை இம்ரான் கான் விற்றுள்ளார். இதற்கிடையே, பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி கமார் ஜாவித் பஜ்வாவுக்கு எதிராக, சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்த குற்றச்சாட்டில், இம்ரான்கானின் தெஹ்ரீக் இ- இன்சாப் கட்சியை சேர்ந்த எட்டு பேரை,எப்.பி.ஐ., கைது செய்து உள்ளது.
Advertisement