லண்டனில் இலங்கை சிறுவன் தாயார் கண்முன்னே சாலை விபத்தில் சிக்கி படுகாயத்துடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் மரணமடைந்த சம்பவம் விசாரணைக்கு வந்துள்ளது.
நான்கு வயதேயான அகர்வின் சசிகரன் என்ற சிறுவனே தாயார் கண் முன்னே சாலை விபத்தில் சிக்கி பரிதாபமான நிலையில் மீட்கப்பட்டு, பின்னர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தவர்.
சம்பவத்தின் போது தாயாரும், தமது 6 வயது சகோதரும் சேர்ந்து தங்களுக்கு மிகவும் பிடித்தமான KFC உணவு வாங்கிவிட்டு, மூவரும் குடியிருப்புக்கு திரும்பியுள்ளனர்.
அப்போது, சாலையை கடக்கும் வேளை, ஆவேசமடைந்த சிறுவன் அகர்வின் சசிகரன், தாயாரிடம் இருந்து விலகி, சாலையை தனியாக கடக்க முயன்றுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த நேரம் பாய்ந்து வந்த Vauxhall Astra கார் ஒன்று சிறுவன் மீது மோதியுள்ளது. மட்டுமின்றி, பாய்ந்து வந்த வாகனத்தை கவனித்த தாயார் அகல்யா சசிகரன், சிறுவனை காப்பாற்ற எடுத்த முயற்சியில் அவரது விரல் உடைந்துள்ளது.
கடந்த 2020 அக்டோபர் மாதம் 11ம் திகதி, மாலை சுமார் 7 மணியளவிலேயே தொடர்புடைய சம்பவம் மேற்கு லண்டனில் ஹேய்ஸ் பகுதியில் நடந்துள்ளது.
இந்த விபத்தில் சிறுவன் அகர்வின் படுகாயத்துடன் மீட்கப்பட்டார். தலை மற்றும் கால்களில் பலத்த காயமேற்பட்டுள்ளதுடன், நினைவு திரும்பாமலே மரணமடைந்துள்ளார்.
ஆனால் இந்த விபத்தை அந்த வாகன சாரதியால் தவிர்த்திருக்கலாம் என கூறியுள்ள பொலிசார், விசாரணையில் குறித்த சாரதி தவறேதும் இழைக்கவில்லை எனவும் கண்டறிந்துள்ளனர்.
விபத்தை தொடர்ந்து Vauxhall Astra சாரதியே அவசர உதவிக் குழுவினருக்கு தகவல் அளித்துள்ளார்.
இதனையடுத்து சிறுவன் அகர்வின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அடுத்த நாள் அதிகாலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.
சம்பவத்தன்று நடந்தவற்றை அகல்யா சசிகரனும் பொலிசாருக்கு விளக்கியுள்ளார். மகனை காப்பாற்ற அகல்யா முயன்றதில் விரல் உடைந்ததும், நீதிமன்ற விசாரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறுவன் அகர்வின் மரணமடைந்த சம்பவம் மொத்த குடும்பத்தையும் உலுக்கியுள்ளதாகவும், லண்டனில் இருந்து வெளியேறி, வேறு பகுதியில் குடியேற முடிவு செய்துள்ளதாகவும் அகல்யா விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.