வணிக பயன்பாடு கட்டடங்களுக்கு 100 சதவீத சொத்து வரி உயர்வு| Dinamalar

திருமழிசை : ‘திருமழிசை பேரூராட்சியில் வணிக பயன்பாடு கட்டடங்களுக்கு நுாறு சதவீத சொத்து வரி உயர்த்தப்படும்’ என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.திருமழிசை பேரூராட்சி உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பேரூராட்சி செயலர் ரவி முன்னிலை வகித்தார். தலைவர் உ.வடிவேலு தலைமை வகித்தார். 15 வார்டு உறுப்பினர்களில் தி.மு.க., உறுப்பினர்கள் ஏழு பேர் மட்டும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

அ.தி.மு.க., உறுப்பினர்கள் எட்டு பேர் கூட்டத்தை புறக்கணித்தனர்.கூட்டத்தில் சொத்து வரியை வணிக பயன்பாடு கட்டடங்களுக்கு நுாறு சதவீதமும், தொழிற்சாலை, கல்வி நிறுவனங்களுக்கு 75 சதவீதமும் உயர்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதேபோல், 600 சதுர அடி குடியிருப்புகளுக்கு 25 சதவீதமும், 601 – 1,200 சதுர அடிக்கு 50 சதவீதமும், 1,201 – 1,800 சதுர அடிக்கு 75 சதவீதமும், 1,800 சதுர அடிக்கு மேல் 100 சதவீதமும் சொத்து வரி உயர்த்தப்படும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் பங்கேற்றாலே பேரூராட்சி கூட்டம் நடத்தலாம்

என்ற விதியின்கீழ், தி.மு.க., உறுப்பினர்கள் ஏழு பேர் மூலம் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக செயல் அலுவலர் ரவி தெரிவித்தார்.மேலும், அ.திமு.க., உறுப்பினர்களுக்கு கூட்டம் குறித்து தகவல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் செயல் அலுவலர் தெரிவித்தார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.