வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு மற்றும் பாமக சார்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பில், சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது செல்லும் என்று தீர்ப்பளித்திருந்தது.
இதனையடுத்து, சென்னை, தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமையிலான எழுவர் குழு சந்திப்பு நடத்தியது. இந்த சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவிக்கையில்,
“வன்னியர்களுக்கு மீண்டும் உள் இட ஒதுக்கீடு சட்டம் கொண்டு வர வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தோம். தேவையான தரவுகளை திரட்டி நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் உறுதி அளித்துள்ளார். இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே 10.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை கொண்டு வரலாம். வன்னியர் இட ஒதுக்கீட்டால் யாருக்கும் பாதகம் ஏற்படாது” என்று அன்புமணி இராமதாஸ் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், 10.5 சதவீத வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பான மேல் நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தற்போது ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் ரகுபதி, ராஜகண்ணப்பன். எம்பிக்கள் வில்சன், என் ஆர் இளங்கோ பங்கேற்றுள்ளனர்.
10.5 சதவீத இட ஒதுக்கீடு அரசாணை ரத்து செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், தற்போது தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.