பேரரசு இயக்கத்தில் அஜித் நடிப்பில் தமிழில் வெளியான திரைப்படம் ‘திருப்பதி’. ஆக்ஷன் சென்ட்டிமென்ட் கலந்த இப்படம் திரைக்கு வந்து பதினாறு வருடங்கள் (ஏப்ரல் 14) ஆனதையொட்டி படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார் பேரரசு.
“‘திருப்பதி’ திரைப்படம் வந்து பதினாறு வருஷம் ஆச்சுங்குறது நம்பவே முடியல. இந்தப் படத்துக்கு முன்னாடி விஜய்யை வைத்து ரெண்டு படங்கள் பண்ணியிருந்தேன். இதனாலயே விஜய் பட டைரக்டர்னு பேர் இருந்தது. இதனால, அடுத்து எந்த ஹீரோ வேணும்னாலும் நமக்கு படம் பண்ணுவாங்க. ஆனா, கண்டிப்பா அஜித் படம் கிடைக்காதுனுதான் நினைச்சிட்டு இருந்தேன். அப்போ, ஏ.வி.எம் புரொடக்ஷன்ல இருந்து போன் வந்தது. ‘நீங்கதான் டைரக்ஷன் பண்ணனும்னு’ சொன்னாங்க. ரொம்ப சந்தோஷப்பட்டேன். அப்போ, அஜித்தான் ஹீரோனு சொன்னாங்க. ரொம்ப ஷாக் ஆகிட்டேன். என்னனா, அஜித்துக்கு இது தெரியுமானு டவுட் இருந்தது. சரவணன் சார்கிட்ட, ‘டைரக்ஷன் பண்ண போறது நானு தெரியுமானு’ கேட்டேன். ‘அவர் சொல்லிதான் பேசுறோம்’னாங்க. ரொம்ப சந்தோஷமாகிட்டேன்.
“இதுக்கு அப்புறம் படத்தோட கதையை எழுதிட்டு புரொடியூசர்கிட்ட கொடுத்தேன். அப்போ படத்துக்கு ‘வெள்ளைகாரன்’னு பேர் வெச்சிருந்தேன். ‘பேரரசுனு சொன்னாலே ஊர் பேர்தான் பேமஸ். அதனால, ஊர் பேர்ல படத்தோட டைட்டில் வைங்கனு’ சொல்லிட்டார். அப்புறம்தான் ‘திருப்பதி’னு வெச்சேன். இந்தப் பேரை சொல்றதுக்கு அஜித் சாருக்கு போன் பண்ணுனேன். டைட்டில் கேட்டுட்டு ஒரு நிமிஷம் அமைதியா இருந்தார். ‘என்னடா சத்தமே இல்லயே, படத்தோட பேர் பிடிக்கல போல’ன்னு நினைச்சிட்டிருந்தேன். அப்போ அஜித் சார், ‘சார், இப்போதான் திருப்பதி கோயில்ல தரிசனம் முடிச்சிட்டு கீழே வந்துட்டு இருக்கேன்னு’னார். அதனாலேயே அஜித் சாருக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.
படத்தோட கதையைச் சொல்றதுக்கு அவரோட வீட்டுக்கு போயிருந்தேன். ‘வாங்க ஜி’னு சொல்லி வீட்டுல உட்கார வெச்சார். அந்த நேரத்துல வீட்டுல யாருமில்ல. அவரே கையில டீ போட்டுட்டு வந்து கொடுத்தார். எனக்கு வாங்கவே தயக்கமா இருந்தது. ஆனா, ரொம்ப கேசுவலா பேசிட்டு இருந்தார். ‘படத்தோட கதையைச் சொல்லட்டுமானு’னேன். ‘இன்னைக்கு கேஸ்வல் மீட்டிங்தான். கதையை அப்புறம் கேட்டுக்குறேன்னு’ சொல்லிட்டார். அந்த நேரத்துல ‘சிட்டிசன்’, ‘ஜனா’ மாதிரி ஆக்ஷன் கதைகள் பண்ணிட்டு இருந்தார். அதனால, பேமிலி சென்டிமென்ட் படம் பண்ணலாம்னு சரவணன் சார்கிட்ட பேசி முடிவு பண்ணியிருந்தோம்.
அப்புறமா ஒரு ஹோட்டல்ல மீட் பண்ணினோம். அப்பவும், கதையைச் சொல்லலாம்னு பேச்சு கொடுத்தேன். அஜித் சார் படத்தோட கதையைத் தவிர கேசுவலா நிறைய விஷயங்கள் பேசிட்டு இருந்தார். அப்போ, ‘திருப்பதி’ படத்தோட டைட்டில் சாங்க் எழுதியிருந்தேன். அதைப் பாடி காட்டுனேன். ‘ஜி, இது போதும்னு’ சொல்லிட்டார். இந்தச் சமயமும் கதை கேட்கல. இதுக்கு அப்புறம் மூணாவது மீட்டிங் போதுதான் கதை கேட்டார். அவருக்குப் பிடிச்சிருந்தது. ‘எனக்கும் பன்ச் டயலாக் இருக்குதானே’ன்னு கேட்டார். ‘கண்டிப்பா இருக்கு’ன்னேன். ‘ஆப்பு கண்ணுக்குத் தெரியாதுடீ’னு விஜய் பேசுற மாதிரியே நம்ம படத்துலயும் வெச்சிருங்க’ன்னு சொன்னார். ‘திருப்பதி இறங்கிப் போறவன் இல்ல, ஏறிப் போறவன்’னு பன்ச் எழுதுனேன். அவருக்கு ரொம்ப பிடிச்சு போயிருச்சு. ‘திருப்பதி’ படத்துல ஒரு காட்சில அஜித் முகத்துல ரத்தம் தடவியிருக்கும். அந்த சீன் எடுத்தப்போ, ‘விஜய்க்கு சந்தனம்… எனக்கு ரத்தமா’ன்னு கேட்டுட்டு சிரிப்பார். இப்படி செட்ல ரொம்ப ஜாலியா இருப்பார்.
இந்தப் படத்துல அஜித்தோட லுக் வித்தியாசமா இருக்கும். ஆக்சுவலி, பாலா சாரோட ‘நான் கடவுள்’ படத்துல அவர் நடிக்கிறதா இருந்தது. அதுக்காக நீளமா முடி வளர்த்திருந்தார். அந்த புராஜெக்ட் டிலேனால நம்ம படத்துல அதே லுக்ல நடிக்க வந்துட்டார். ஜனவரில படத்தோட ஷூட்டிங் தொடங்கி ஏப்ரல் 14 படத்தை ரிலீஸ் பண்ணிட்டோம். ரொம்ப ஸ்பீடா வொர்க் பண்ணுனோம். ப்ளான் பண்ணி சரியா முடிச்சனால அஜித் சார் ரொம்ப ஹேப்பி ஆகிட்டார். படத்துல சென்டிமென்ட் சீன் இருக்கும். தங்கச்சி சென்டிமென்ட் காட்சி பேசுறப்போ டப்பிங் போது ரொம்ப கண்கலங்கிட்டார். படத்துல ஹீரோயினா நடிக்க நயன்தாராகிட்ட பேசுனோம். அப்ப அவங்க தெலுங்குல பிஸியா இருந்ததால நடிக்க முடியல.
இருந்தும் அவங்க, ‘கொஞ்சம் பொறுங்க கால்ஷீட் கொடுத்தரேன்னு’னாங்க. ஆனா, எங்களுக்கு டைம் இல்லாததால சதாவுக்குப் போயிட்டோம். ‘திருப்பதி’ படத்துக்குப் பிறகு அஜித் சார்கூட திரும்ப வொர்க் பண்ணவும் கேட்டாங்க. ஆனா, நான் அந்த நேரத்துல வேறொரு படத்துல கமிட்டானதால பண்ண முடியல. இப்பவும் அஜித் சார்கூட பேசுவேன். ஆனா, ரொம்ப தொந்தரவு பண்ண மாட்டேன். சமீபத்துல அவருடைய பையன் பிறந்தநாளைக்குக் கூப்பிட்டு இருந்தார். அவர்கூட வேலைப் பார்த்தவங்களைக் கூப்பிட்டு இருப்பார்னு நினைச்சுக்கிட்டு போனேன். ஆனா, என்னையும் சிறுத்தை சிவாவும் மட்டும்தான் கூப்பிட்டு இருந்தார்.
எப்போதும் அஜித் சார் பணத்துக்காக படம் பண்ண மாட்டார். ஒருத்தருடைய குணம் பிடிச்சா மட்டும்தான் வொர்க் பண்ணுவார். சில நேரங்களில் தயாரிப்பாளருக்கு நல்லது பண்ணணும்னு படம் பண்ணியிருக்கார். நிறையப் பேருக்குக் கை கொடுப்பார்” என்று நெகிழ்ச்சியுடன் முடிக்கிறார் பேரரசு.