விபசார விடுதிகளில் போலீசார் சோதனை நடத்தும் போது, வாடிக்கையாளர்களை கைது செய்ய கூடாது என்றும், அவர் மீது கடத்தல் வழக்கு தொடர முடியாது எனவும் கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
விபச்சார விடுதியில் இருந்ததற்காக போலீசார் தன்னை கைது செய்தது தவறு என கூறி, பெங்களூரை சேர்ந்த பாபு என்பவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு, நீதிபதி எம்.நாகபிரசன்னா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் கோரிக்கை ஏற்று அவர் மீதான வழக்கை நீதிபதி ரத்து செய்தார்.
மேலும், போலீசார் விபச்சார விடுகளில் சோதனை செய்யும் போது, அங்கிருக்கும் ஆண் வாடிக்கையாளர்களை கைது செய்ய கூடாது என்றும், அவர் மீது கடத்தல் வழக்கு தொடர முடியாது என்றும் கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். வாடிக்கையாளர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிய கூடாது என்று பல்வேறு வழக்குகளில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகவும் நீதிபதி அப்போது விளக்கினார்.
நாடு முழுவதுமே சட்டவிரோதமாக ஆங்காங்கே விபசார விடுதிகள் செயல்பட்டு வருகிறது. அதில், சிலவற்றில் சிறுமிகள், இளம் பெண்கள் கடத்தப்பட்டு விபசாரத் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. அந்த வகையில், கடந்த ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி பெங்களூரில் ஒரு விபசார விடுதி செயல்பட்டு வந்ததாக ரகசிய தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது.
அதன்படி, கெங்கேரி மசூதி சாலையில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தி 3 சிறுமிகளை போலீசார் மீட்டனர். மேலும், விஜயம்மா, கலீம் மற்றும் வாடிக்கையாளர் பாபு ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டனர். இதில் பாபு மீது ஒழுக்கக்கேடான கடத்தல் தடுப்புச் சட்டம்-1956இன் பிரிவுகள் 3, 4, 5, 6 மற்றும்இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 370 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. போலீசார் தங்களது முதல் தகவல் அறிக்கையில். ஆட்கடத்தல் தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின்படி, விபசார விடுதியில் சோதனை செய்து விஜயம்மா, கலீம் மற்றும் வாடிக்கையாளர் பாபு ஆகியோரை கைது செய்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், பாபு தொடர்ந்த வழக்கில், விபசார விடுதிகளில் சோதனை நடத்தும் போது, அங்கு இருக்கும் வாடிக்கையாளர்களை கைது செய்யக் கூடாது என்று கர்நாடக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், பல்வேறு வழக்குகளில் அளிக்கப்பட்டுள்ள தீர்ப்புகளையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. சட்டத்தின் பல்வேறு விதிகளை மேற்கோள் காட்டி, வாடிக்கையாளருக்கு எதிராக எந்தப் பிரிவுகளையும் பயன்படுத்தக் கூடாது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீர்ப்பு ஒன்றையும் நீதிபதி அப்போது சுட்டிக்காட்டினார்.
சட்டத்தின் பிரிவு 3 விபச்சார விடுதியை நடத்துவது, வீடு அல்லது வளாகத்தை விபசார விடுதியாக பயன்படுத்த அனுமதிப்பதற்காக தண்டனை பற்றி பேசுகிறது. பிரிவு 4 விபசாரத்தின் சம்பாத்தியத்தில் வாழ்வதற்கான தண்டனையுடன் தொடர்புடையது. பிரிவு 5 விபச்சாரத்திற்காக ஒரு நபரை வாங்குவது, தூண்டுவது அல்லது அழைத்துச் செல்வது தொடர்பானது. பிரிவு 6 விபச்சாரத்தை நடத்தும் வளாகத்தில் உள்ள ஒரு நபரை காவலில் வைப்பது தொடர்பானது. ஐபிசியின் பிரிவு 370 ஆட்களைக் கடத்துவதைப் பற்றி பேசுகிறது.
உண்மையில், 2017 ஆம் ஆண்டிலேயே, ‘வாடிக்கையாளர்’ விபசாரத்தை ஊக்குவிப்பதாகவும், பாதிக்கப்பட்டவரை பணத்தை காட்டி சுரண்டுவதாகவும் உணர்ந்ததாக நீதிமன்றம் கூறியது. ஆனால் எந்தவொரு குறிப்பிட்ட தண்டனை விதியும் இல்லாத நிலையில், மேலே கூறப்பட்ட குற்றங்களுக்கான பொறுப்பானவர் என வாடிக்கையாளரை கூற முடியாது என்றும் இதற்கு முன்னர் ஒரு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.
கர்நாடகா உயர் நீதிமன்றம்
மற்றும் பிற உயர் நீதிமன்றங்களின் பல்வேறு முந்தைய தீர்ப்புகளின் அடிப்படையில், இந்த கருத்தை கர்நாடகா உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.