விவசாயம் செழிக்க வேண்டி சிங்கிலிபட்டி – கல்குமி கிராமத்தில் பொன் ஏர் பூட்டும் நிகழ்ச்சி: உற்சாகமாக பணிகளை தொடங்கிய விவசாயிகள்

கோவில்பட்டி: விவசாயம் செழிக்க வேண்டி சிங்கிலிபட்டி – கல்குமி கிராமத்தில் பொன் ஏர் பூட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில், விவசாயிகள் உற்சாகமாக கலந்து கொண்டு விவசாய பணிகளை தொடங்கினர்.

ஆண்டு முழுவதும் விவசாயம் செழிக்கவேண்டும் என்பதற்காக சித்திரை மாதம் பிறந்ததும் விவசாயிகள் அனைவரும் ஒன்றுகூடி பொன் ஏர் திருவிழா நடத்துவது கிராமப்புறங்களில் ஐதீகம். அதன்படி சித்திரை மாத பிறப்பான இன்று விளாத்திகுளம் அருகே சிங்கிலிபட்டி -கல்குமி கிராமத்தில் உள்ள மானாவாரி நிலத்தில் பொன் ஏர் பூட்டும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு, விவசாயிகள் பணிகளைத் தொடங்கினர். முன்னதாக உழவுக்கு காரணகர்த்தாவான காளை மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளில் மஞ்சள் தடவி, குங்குமமிட்டு, வெற்றிலை காப்பு, மாலை அணிவித்தனர். பின்னர், ஏர் கலப்பைகளை சுத்தப்படுத்தி மஞ்சள் பூசி, குங்குமமிட்டு, வீடுகளில் உள்ள பயறு மற்றும் சிறு தானிய விதைகளை ஓலைக் கொட்டானில் வைத்து கோயிலுக்கு கொண்டு சென்று வழிபட்டனர்.

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) நாச்சியார். சிங்கிலிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் செல்லக்குமார், ஆற்றங்கரை ஊராட்சி மன்ற தலைவர் சீதாராமன், ஊர் தலைவர்கள் சேதுராஜ், துரைராஜ், நாட்டாமை முத்துக்கண்ணன், கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன், கிராம நிர்வாக அலுவலர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலையில் விவசாயிகள் தங்கள் வீட்டு வாசலில் குத்துவிளக்கு ஏற்றி நிறைகுடம் தண்ணீர் வைத்து நவதானியங்களை குவித்து வைத்து விவசாய கருவிகளுக்கும் காளை மாடுகளுக்கும் சந்தனம் குங்குமம் மாலையிட்டு பூஜை செய்து வழிபட்டனர்.

அதன் பின்னர் சூரிய வழிபாடு செய்து அலங்கரிக்கப்பட்ட காளை மாடுகள் மற்றும் டிராக்டர்கள் மூலம் கிழக்குத் திசையில் உள்ள பொது நிலத்தில் உழவு பணிகள் செய்து நவதானியங்களை விதைப்பு செய்தனர். நிறைவாக விவசாயிகள் வீடுகளுக்கு திரும்பி வரும்போது, கிராம எல்கையில் விவசாயிகளை பெண்கள் மஞ்சள் நீர் ஊற்றி வரவேற்றனர். தொடர்ந்து விவசாயிகள் அவரவர் நிலங்களுக்கு சென்று உழவு பணியில் ஈடுபட்டனர்.

இதே போல், கோவில்பட்டி அருகே பிள்ளையார்நத்தம் கிராமத்தில் நடந்த பொன் ஏர் திருவிழாவில், சுமார் 60 டிராக்டர்கள் கலந்து கொண்டு ஊர் நாட்டாமை அப்பாசாமி நாயக்கர் புஞ்சையில் கிராம மக்கள் ஒன்று கூடி அங்கு பச்சரிசி, கம்பரிசி, மற்றும் நிறை நாழி கம்பு, நெல் வைத்து வழிபாடு நடத்தினர். சூரியனுக்கு தீபாராதனையை தொடர்ந்து, நவதானியங்கள், பருத்தி விதைகள் தூவியும், புஞ்சையில் உள்ள முள் செடி மற்றும் வேண்டாத களை செடிகள் அகற்றப்பட்டு, விதை தூவப்பட்டது. பின்னர் டிராக்டர்கள் மூலம் பொன் ஏர் உழவு செய்யப்பட்டது.

விழாவில் தேசிய விவசாயிகள் சங்க தலைவர் ரெங்கநாயகலு, கிளை தலைவர் சௌந்தரராஜன், ராஜாராம், முனியசாமி, யோகராஜ், கனகராஜ், குருராஜ், ஆழ்வார்சாமி நாயக்கர், வேலுசாமி, சீனிவாசன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.