பீஜிங்:சீனாவின் ஷாங்காய் நகரில், கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், ஊரடங்கு அமலில் உள்ளது. இதையடுத்து, அங்குள்ள இந்திய துணை துாதரகம் மூடப்படுவதாக அதிகாரிகள் கூறி உள்ளனர்.
அண்டை நாடான சீனாவின் தொழில் நகரமான ஷாங்காயில், உருமாற்றம் அடைந்த ‘ஒமைக்ரான்’ கொரோனா பரவல் கடுமையாக அதிகரித்து வருகிறது.வைரஸ் பரவலை தடுக்க, அந்நாட்டு அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஷாங்காய் நகரில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்நிலையில், ஷாங்காய் நகரில் செயல்படும் இந்திய துணை துாதரகம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.இதுதொடர்பாக, துாதரக அதிகாரிகள் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கை:ஷாங்காய் நகரில், கொரோனா பரவல் காரணமாக, முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், துாதரக சேவைகளை நேரிடையாக வழங்க இயலவில்லை.
இருப்பினும், அவசர தேவைகளுக்கு இந்தியர்கள், ‘ஆன்லைன்’ மற்றும் தொலைபேசி வாயிலாக, துாதரகத்தை தொடர்பு கொள்ளலாம். சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள இந்தியர்கள், தங்களுக்கான சேவைகளை பெற, பீஜிங்கில் உள்ள துாதரகத்தை அணுகலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.
Advertisement