சித்திரைத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று காலை நடைபெறுவதால் மதுரையே விழாக்கோலம் பூண்டுள்ளது.
கடந்த 5-ம் தேதி தொடங்கிய மதுரை மீனாட்சி கோயில் சித்திரைத் திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் சித்திரை முதல் நாளான இன்று காலை 10.35 மணி முதல் 10.59-க்குள் நடைபெறுகிறது. இதை மக்கள் கண்டுகளிக்க வசதியாக கட்டணச் சீட்டு அனுமதியும் இலவச அனுமதியும் அளிக்கப்பட்டுள்ளது. நேரில் வர முடியாதவர்கள் தொலைக்காட்சி, யூ டியூப், பேஸ் புக் நேரலை மூலமும், திருக்கோயில் இணையதளத்திலும், மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள மாமதுரை செயலி மூலமும் கண்டு பக்தி பரவசம் அடையலாம்.
திருக்கல்யாணத்தை முன்னிட்டு நேற்று மாலையிலிருந்து இன்று மாலை வரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு அறுசுவை விருந்து வைபவம் நடக்கிறது.
இதற்காக ‘பழமுதிர்ச்சோலை திருவருள் முருகன் பக்தர் சபை’யினர் ஆண்டு தோறும் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். 22 ஆண்டுகளாக இந்த விருந்து வைபவத்தை சிறப்பாக நடத்தி வரும் இவர்கள், கடந்த 2 ஆண்டுகள் கோவிட் கட்டுப்பாட்டால் பெரிய அளவில் விருந்து கொடுக்க முடியாததால் இந்தாண்டு விருந்து வைபவத்தை பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகளை செய்தனர்.
இதற்காக நன்கொடையாளர்கள் பல்வேறு பங்களிப்புகளைச் செய்துள்ளார்கள். மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட், பரவை மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் 5 டன் காய்கறிகளை வழங்கியுள்ளார்கள். இதுபோல் அரிசி வியாபாரிகள், எண்ணெய்,பலசரக்கு, மளிகை பொருள்களை அந்தந்த வியாபாரிகள் சங்கத்தினர் வழங்கியுள்ளனர். எரிவாயு விநியோகஸ்தர் சங்கத்தினர் எரிவாயு சிலிண்டர்களை வழங்கியுள்ளனர்.
சேதுபதி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறும் விருந்து உபசரிப்புக்கான பணியில் 100-க்கும் மேற்பட்ட சமையல்காரர்கள், 500 க்கும் மேற்பட்ட உதவியாளர்கள் இவர்களுடன் 1000 தன்னார்வலர்களும் ஈடுபட்டுள்ளனர்.
காய்கறிகளை வெட்ட, இலை வெட்ட மதுரையிலுள்ள பெண்கள், ஆண்கள் நூற்றுக்கணக்கான பேர் அரிவாள்மனை, கத்திகளுடன் வந்து வேலை செய்கின்றனர்.
பலவகையான ருசியில் மக்கள் உணவருந்த வேண்டும் என்பதால் ஒரே மாதிரி இல்லாமல், வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல், வெஜ் பிரியாணி, சாம்பார் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம், கூட்டு, பொரியல், கேசரி, வடை என வெரைட்டியாக உணவு வழங்கப்படுகிறது. நேற்று மாலை மாப்பிள்ளை அழைப்பு விருந்து நடைபெற்றது.
தாங்கள் வணங்கும் தெய்வத்தின் திருமண விருந்துக்காக ஆயிரக்கணக்கான பேர் சேர்ந்து தங்கள் வீட்டுத் திருமணம் போல் வேலை செய்வதும், அதன் மூலம் மன நிறைவு கொள்வதையும் மதுரையில் மட்டுமே காண முடியும். அதுபோல் திருக்கல்யாணத்துக்கு வருகை தந்த மக்கள் சாமிக்கு மொய் எழுதுவதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.
திருக்கல்யாணத்தை தொடர்ந்து 15-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து 16-ம் தேதி கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ளது.