டாக்டர் அம்பேத்கர்’ அரசியல்வாதி, பொருளாதார நிபுணர் மற்றும் சட்ட வல்லுனர் என பன்முகத் திறன் கொண்டவர், நாட்டின் அரசியலமைப்பை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தார்.
சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக இருந்தார். இந்திய அரசியலமைப்பை உருவாக்குவதில் அவரது பங்கு காரணமாக, அவர் இந்திய அரசியலமைப்பின் தந்தை என்றும் அழைக்கப்படுகிறார்.
அம்பேத்கர்’ பெண்கள் மற்றும் தொழிலாளர் உரிமைகள் மற்றும் சமத்துவத்திற்காக குரல் கொடுப்பவராகவும் இருந்தார். சமூக உரிமை வழக்கறிஞர் அம்பேத்கரை நினைவு கூறும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த நாளான, ஏப்ரல் 14 அன்று நாடு முழுவதும் அம்பேத்கர் ஜெயந்தி அனுசரிக்கப்படுகிறது.
நாட்டின் சமூக-பொருளாதார முன்னேற்றத்தைப் பற்றி சிந்திக்க அனைத்து இந்தியர்களுக்கும் இந்த நாள் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
பாபாசாகேப் அம்பேத்கர் ஏப்ரல் 14, 1891 இல் மஹர் குடும்பத்தில் பிறந்தார். அந்த நேரத்தில் சமூகத்தால் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடுவதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார்.
வரலாறு
தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் பிறந்த பீம்ராவ் அம்பேத்கர், குழந்தை பருவம் முதலே பல பாகுபாடுகளை அனுபவித்தார். உத்தியோகபூர்வ பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, பம்பாய் பல்கலைக்கழகத்திலும், அதைத் தொடர்ந்து அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்திலும், லண்டன் பொருளாதாரப் பள்ளியிலும் மாணவராக இருந்தார்.
டாக்டர் அம்பேத்கர் சட்டம், பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியல் ஆகியவற்றில் தனது படிப்புகளுக்காக சட்டப் பட்டங்களையும் முனைவர் பட்டங்களையும் பெற்றார். அதன்மூலம் வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியர் ஆனார்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் மற்றும் சமூக சுதந்திரத்திற்காக அழுத்தம் கொடுத்தார்.
இந்தியாவின் சாதி அடிப்படையிலான அமைப்பை எதிர்த்துப் போராடிய சிறந்த அரசியல்வாதி, அவரது பிறந்த நாள் நாடு முழுவதும் சமத்துவ தினமாக அனுசரிக்கப்படுகிறது.
அம்பேத்கர் சமூகத்துக்கு ஆற்றிய சேவைகளை முன்னிட்டு, 1990 ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய சிவிலியன் விருதான ‘பாரத ரத்னா’ அவரது மரணத்திற்குப் பின் வழங்கப்பட்டது. டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கையும் சிந்தனைகளும் இன்றும் மில்லியன் கணக்கான மக்களை ஊக்குவிக்கின்றன.
அம்பேத்கர் பிறந்தநாளில், அவரது சில சக்திவாய்ந்த பொன்மொழிகளை நாங்கள் உங்களுக்குக் கொண்டு வருகிறோம்.
”உங்களுடைய சமூக அமைப்பை மாற்றாமல் நீங்கள் சிறிது கூட முன்னேற்றம் காண முடியாது. சாதியை அடிப்படையாக வைத்து நீங்கள் எதையும் உருவாக்க முடியாது, அப்படி உருவாக்கினாலும் அது உடைந்து சிதறி உருப்படாமல் போகும்”
”ஓர் அடிமைக்கு அவன் அடிமை என்பதை முதலில் உணர்த்து. பிறகு, அவன் தானாகவே கிளர்ந்து எழுவான்”
”பலிபீடத்தில் வெட்டப்படுபவை ஆடுகள்தான் சிங்கங்களல்ல சிங்கங்களாக இருங்கள்”
”தன்னை உயர்ந்த ஜாதியாகவும் இன்னொரு மனிதனை தாழ்ந்த ஜாதியாகவும் கருதுபவன் மனநோயாளி”
”எவனொருவன் தானே சரணடையாமல் மற்றவர்களின் விருப்பபடி செயல்படாமல். அனைத்தையும் சோதனைக்கு உட்படுத்தி அறிவு வெளிச்சத்தில் அலசி ஏற்கிறானோ அவனே சுதந்திர மனிதன்”
”அறிவு நன்னடத்தை சுயமரியாதை இவையே நான் வணங்கும் தெய்வங்கள் இவற்றை தவிர வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை”
”நீ என்னை உன் அடிமை என்று நினைக்கும் போது.. உன்னை அழிக்கும் ஆயுதமாக நான் மாறிவிடுவது என் கடமை”
”ஆயிரம் ஆண்டு காலம் அடிமையாய் வாழ்வதை விட, அரை நிமிடமெனும் சுதந்திர மனிதனாக, வாழ்ந்துவிட்டு இறப்பது சிறந்தது”
“ “