கே.ஜி.எஃப்-பில் (K.G.F) கொடி ஏற்றிவிட்ட ராக்கி பாய்க்கு, அரசியல்வாதிகளும், மிச்சம் வைத்த பகையாளிகளும் கூட்டு சேர்ந்து தொல்லை கொடுக்கின்றனர். அவற்றை எப்படி ராக்கி பாய் சமாளித்தார் என்பதுதான் ‘கே.ஜி.எஃப் சேப்டர் 2’.
கருடனைக் கொன்ற கையோடு ராக்கி பாய் கோலார் தங்க வயலில் தன் சிம்மாசனத்தை நிலைநாட்டுகிறார். ஏறிக்கொண்டிருக்கும் ஏணியின் கீழ் படிகள் ஆங்காங்கே சிக்கலை உண்டாக்கி நிலை தடுமாறச் செய்கின்றன. இறந்து போனதாய் நினைக்கும் ஒருவன் உயிர்ப்பெற்று வர, அதே களத்தில் புதிய வில்லன்களைச் சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகிறார் ராக்கி பாய். புதிய வில்லன்களுடன் அரசியல் காய் நகர்த்தல்களும் சேர்ந்துகொள்ள சிக்கல்களில் சிக்குகிறார் ராக்கி. உலகின் ஒட்டுமொத்த தங்கத்தையும் கொண்டு வருவேன் என்ற அந்தச் சிறுவனின் சத்தியம் என்ன ஆனது என்பதை பிரமாண்டமாய் சொல்லியிருக்கிறது இந்த இரண்டாம் பாகம். அம்மா சென்டிமெண்ட், மக்கள் புரட்சி, வில்லன்கள், சாகசங்கள் என கமெர்ஷியல் சினிமாவுக்கான மீட்டரில் டிஸ்டிங்சன் பெறுகிறது இந்தப் பாகம்.
ராக்கி பாயாக ராக்கிங் ஸ்டார் யஷ். தமிழ் சினிமாக்களில் சிலவற்றை ரீமேக் செய்து நடித்திருக்கும் யஷ்ஷை தென்னிந்திய முழுக்கத் திரும்பிப் பார்க்க வைத்த படம் ‘கே.ஜி.எஃப்’. ரத்தம் தெறிக்க எதிராளியை அடித்துவிட்டு, அதே கையில் தன் தலையை கோதிவிட்டுக்கொள்ளும் ராட்சஸனாக மிரட்டியிருக்கிறார் யஷ். முதல் பாகத்தின் கதை சொல்லி ஆனந்த் நாக். தமிழ் டப்பிங்கில் நிழல்கள் ரவி குரலில் ஒவ்வொரு வசனமும் ‘திருக்குறள் மனப்பாட செய்யுள்’ அளவுக்கு எல்லோருக்கும் மனப்பாடம் ஆகிப் போயிருந்தது. இந்தப் பாகத்தில் ஆனந்த் நாகுக்குப் பதிலாக அவரது மகன் பாத்திரத்திலிருந்து கதையைச் சொல்கிறார் பிரகாஷ் ராஜ்.
படத்துக்கு பாலிவுட்டில் இருந்து இரண்டு இறக்குமதிகள். ஒன்று சஞ்சய் தத், இன்னொன்று ரவீனா டாண்டன். கருடனுக்கு மாற்றாக அதிராவாக சஞ்சய் தத். முரட்டு உடம்பும், பாதி மலித்த தலையில் டாட்டூவும் என மூர்க்கம் கொண்டதொரு மிருகமாய் தோன்றுகிறார் சஞ்சய் தத். ஆயிரம் ஆண்டுகளாய் சாகாவரம் பெற்ற அரச காலத்து வீரன் போல் இருக்கும் அவரின் உடைகளும், அவர்தம் பரிவாரங்களும் மேலும் பிரமிக்க வைக்கின்றன. இந்தியாவின் பிரதமராக, ராக்கியின் அரசியல் விரோதியாக ரவீனா. இந்தியாவின் பெண் பிரதமர், டிக்டேட்டர் என ஒரு புனைவுக் கதையில் முடிந்தளவு உண்மைத் தன்மையுடன் கூடிய ஒரு பிரதமர் கதாபாத்திரத்தை சுவாரஸ்யமான சர்ச்சைகளுடன் இணைத்திருக்கிறார்கள். ஈஸ்வரி ராவ், ‘வட சென்னை’ சரண் என நமக்குத் தெரிந்த முகங்களும் ஆங்காங்கே வருகிறார்கள்.
‘செம்ம படம்டா மெரட்டிட்டாணுக’ என்னும் வாய்மொழி வாயிலாகவே, பலரை தியேட்டர் பக்கம் இழுத்தது கே.ஜி.எஃப். நான்கு ஆண்டுகள் இடைவெளியில், டிவி, ஓடிடி-யிலாவது கே.ஜி.எஃபை அநேகம்பேர் பார்த்துவிட்டார்கள். அதனாலேயே, இந்தப் பாகத்துக்கு இந்திய முழுக்க பலத்த எதிர்பார்ப்பு. பிரமாண்டம், பெரிய பட்ஜெட், டப்பிங் என்பதாக மட்டும் இல்லாமல், கதையாகவே ஒரு பான் இந்தியன் சினிமாவாக விரிகிறது ‘கே.ஜி.எஃப் 2’.
இரண்டாம் பாகத்தில் ஆடியன்ஸைத் திருப்திப் படுத்துவது என்பது சவாலான காரியம். படப்பிடிப்பு முடிந்து இரண்டாடுகள் கழித்தும், நான்கண்டு இடைவெளியுடன் வெளியாகியிருக்கும் ஒரு படம் நம்மைத் திருப்திப்படுத்துவதற்கும் மேலாக குதூகலபடுத்துவதற்கு மிகப்பெரிய உழைப்பு வேண்டும். அதை ‘கே.ஜி.எஃப்’ குழு சிறப்பாகச் செய்திருக்கிறது.
இந்திய சினிமாக்களில் கமெர்ஷியல் கதைசொல்லிகள் நிறைய பேர் உண்டு. தன் மூன்றாவது படத்திலேயே அந்த முன்னணி இயக்குநர்களின் பட்டியலில் டாப் 3 இடத்துக்குள் வந்துவிட்டார் பிரசாந்த் நீல். கதைக்குப் பிரமாண்டமான காட்சிகளைச் சேர்க்கும் படைப்பாளிகளுக்கு மத்தியில், கதையையே பிரமாண்டமாக எழுதியிருக்கிறார் பிரசாந்த். “நான் ஏதோ பத்து பேர அடிச்சு டான் ஆகலை. நான் அடிச்ச பத்து பேருமே டான்தான்” என்னும் வசனம் பிரசாந்த் நீலுக்கே பொருந்துகிறது. பார்வையாளர்களின் கூஸ்பம்ஸுடன் கமர்ஷியலாக ஒரு சினிமாவை எப்படி எடுக்க வேண்டும் எனப் பாடம் எடுத்திருக்கிறார்.
முதல் பாகத்தைப் போலவே இதிலும் அவரின் டிரேட்மார்க் பன்ச் வசனங்கள் அப்ளாஸ் அள்ளுகின்றன. “ராக்கி பாய பால் கொடுத்து வளர்த்தல, பன்ச் டயலாக் கொடுத்துதான் அவன் தாய் வளர்த்தா” என்பது போல முதல் பாகத்திலும் இரண்டாம் பாகத்திலும் பன்ச் வசனங்களை எழுதி குவித்திருக்கிறார் பிரசாந்த் நீல். அதை, எனெர்ஜி குறையாமல் அப்படியே தமிழ் டப்பிங்கில் கொண்டுவந்திருக்கிறார் அசோக்.
“ஆமா, CEOநா என்ன?”
“பாஸுக்கெல்லாம் பாஸ்.”
“அப்ப நானும் CEOதான். இந்தியாவுக்கு!”
“Powerful people make places powerful”
என எல்லா மொழிகளிலும் பன்ச் வசனங்கள் அனல் கக்குகின்றன. சண்டைக் காட்சிகளில் படத்தின் பிரமாண்டத்துக்கு நியாயம் செய்திருக்கிறார்கள் அன்பறிவு. முதல் பாகத்துக்கு தேசிய விருது வாங்கியவர், இந்தப் பாகத்துக்கு மட்டும் சும்மா இருந்துவிடுவாரா!
‘வைக்கிங்’ பிம்பமான சஞ்சய் தத்தை எதிர்கொள்ள, கறுப்பு மணலில் இருந்து சுத்தியல் எடுக்கும் காட்சி எல்லாம் ‘திரை தீப்பிடிக்கும் ரகம்’. முதல் பாகத்தில் வந்த சில பாடல்களை, இன்னும் மெருகேற்றி இதில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
ரவி பஸ்ரூரின் பின்னணி இசை ஒவ்வொரு இசைக்கருவியிலும் தீயை வைத்து வாசித்ததைப் போல அதிர வைக்கிறது. சிவப்பு, கறுப்பு என இரண்டு நிறங்களில்தான் பல காட்சிகள் நமக்குக் காட்டப்படுகின்றன. ‘Mad Max Fury Road’ படம் போல, அந்தந்த மணல் பரப்பையும், அதில் நடக்கும் சண்டைகளையும் அகண்ட விழிகளில் படம் பிடித்திருக்கிறது புவன் கௌடாவின் கேமரா. படத்தின் பிரமாண்டத்தை கலர் டோனிலேயே காட்டி விசுவல் விருந்து படைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் புவன். மணற்மேடுகளில் வரிசைகட்டி நிற்கும் வாகனங்கள், மனிதக் குவியல்கள், அதிகார மோதல்கள், துப்பாக்கிகள் எனச் சின்ன சின்ன கட்களில் கதையை எடிட் செய்து அசரடித்திருக்கிறார் படத்தொகுப்பாளர்.
படத்தின் நாயகிக்கு வழக்கம்போல அத்தனை முக்கியமானதொரு பாத்திரம் இல்லை. கதையில் அவர் இல்லை என்று சொல்லிவிடக்கூடாது என்பதற்காக அவரை நாயகனுடனே பயணிக்க வைத்திருக்கிறார்கள். மற்றபடி அந்தக் ‘காதல் கலாட்டா’ முதல் பாகத்தின் நீட்சியாக வலிந்து திணிக்கப்பட்ட ஒன்றாகவே துருத்திக்கொண்டு நிற்கிறது. அதேபோல், தொடக்கத்தில் நாயகன் சாகக்கூடாது என வில்லன் மன்னித்துவிடுவதும், வில்லன் சாகக்கூடாது என நாயகன் மன்னித்துவிடுவதும் கதையின் வளர்ச்சிக்குத்தான் என்றாலும், அது இருவரின் கதாபாத்திரத்தையும் கேலி செய்யும் ஒன்றாக மாறி நிற்கிறது.
தென்னிந்திய சினிமாக்கள் உலகம் முழுக்க வெளியாகி கவனம் ஈர்க்கக்கூடிய காலமிது. கே.ஜி.எஃப் இரண்டாம் பாகம் அதில் முதன்மையான சினிமா. வாய்ப்புக் கிடைத்தால் பெரிய திரையரங்குகளில் கண்டு கழியுங்கள்.