KGF-2 படம் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் இன்று வெளியாகி இருக்கிறது. படத்திற்கான டிக்கெட்கள் இலட்சக்கணக்கில் விற்று தீர்ந்திருப்பதாக ஆன்லைன் டிக்கெட் விற்பனை தளமான BookMyShow தெரிவிக்கிறது. முதல் பாகத்தின் வெற்றிக்குப் பிறகு இரண்டாவது பாகத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியது. களமும் பெரிது என்பதால் இதற்கான உழைப்பும் பெரிது. பெரியளவில் உருவாக்கப்பட்ட இந்த படத்தின் எடிட்டர் பற்றிக் கேட்டால் நீங்கள் வியந்து போவீர்கள். உஜ்வல் குல்கர்னி இந்தப் படத்திற்கு எடிட்டிங் செய்துள்ளார். இவருக்கு வயது 19.
உஜ்வல் குல்கர்னி மூன்று வருடங்களுக்கு முன்பு அவருடைய பாணியில் KGF படத்தின் பாடலுக்கு எடிட் செய்து வீடியோ அப்லோட் செய்திருந்தார். அவரது எடிட்டிங் இயக்குனர் பிரசாந்த் நீலுக்கு பிடித்து போக 19 வயதான உஜ்வல் குல்கர்னியை அழைத்து KGF பாகம் 2-க்கான ட்ரைலர் கட் வாய்ப்பு கொடுத்தார். உஜ்வல் பிரமாதமாக செய்துவிடவே மொத்த படத்திற்கான வேலையையும் இயக்குனர் நம்பி ஒப்படைத்தார். இந்தப் படத்தில் ஏராளமான வில்லன்கள், கிளைக்கதைகள், முன்-பின் கதை சொல்லும் முறைகள், டீடெயில்ஸ் இருப்பதால் இதற்கான பணி சவால்கள் நிறைந்ததுதான். அதனை சாதித்திருக்கும் உஜ்வல்-க்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
உலகம் முழுவதும் கொண்டாடும் ஒரு படத்தின் எடிட்டிங் இந்த சின்ன வயதில் ஒருவர் செய்திருக்கிறார் என்பது திரைத்துறை வட்டாரத்தையே ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. சமீபத்திய பிரஸ்மீட் ஒன்றில் KGF பட ஹீரோ யஷ் “எங்க டெக்னிசியன்ஸ் மேடையில் பேச மாட்டாங்க, Screen-ல பேசுவாங்க” என தெரிவித்திருந்தார்.