தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதிலிருந்து ஆளும் திமுக அரசு மீது கடுமையான விமர்சனங்களைத் தொடர்ந்து வைத்துக்கொண்டே இருக்கிறார். முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி பல்வேறு அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கிக்கொண்டே போகிறார். சமீபத்தில் முதல்வரின் துபாய் பணயம் குறித்தும், `முதல்வர் முதலீடு செய்யத் தான் துபாய் செண்டிருக்கிறார்’ என்று விமர்சனம் வைத்திருந்தார். இதற்கு எதிராக நஷ்டஈடு கேட்டு அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற சூழலில் தான் அண்ணாமலை அந்தமான் துணைநிலை ஆளுநர் பதவிக்குக் காய் நகர்த்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகின. சமீபத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், “தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை தெலங்கானா மற்றும் புதுவை கவர்னர் ஆகிவிட்டார். அடுத்த தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய அமைச்சராகிவிட்டார். அதேபோல, அண்ணாமலையும் அந்தமான் கவர்னர் பதவியைக் குறிவைத்துக் காய்நகர்த்தி வருகிறார். அவர்களுக்குக் கிடைத்தது போல தனக்கும் கவர்னர் பதவி கிடைக்கும் என்று அண்ணாமலை துடிக்கிறார்.
அந்த காரணத்தினால் தான் தினமும் திமுக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துக்கொண்டிருக்கிறார். அண்ணாமலைக்குத் தகுந்த இடம் திருவண்ணாமலை தான். அங்கே பல சித்தர்கள் இருக்கிறார்கள். இவரும் ஒரு சித்தராக இருக்கலாம். தமிழக அரசியலைப் புரட்டிப் போட்டுவிடலாம் என்ற வகையில் அவர் பேசுவது இங்கே நடக்காது. குஜராத், உத்தரப் பிரதேச மாநில மக்களைப் போன்றவர்கள் தமிழக மக்கள் இல்லை”என்று கூறினார்.

மேலும், “150 ஆண்டுகளாக அரசியலைப் பின்பற்றிவரும் மாநிலம் தமிழகம். இங்குள்ள மக்கள் அனைவருமே விழிப்புணர்வுடன் இருப்பவர்கள். அண்ணாமலையின் கோரிக்கைக்குப் பிரதமர் மோடி செவிசாய்த்து, அந்தமான் கவர்னர் பதவியை அவருக்கு வழங்குவர். ஆனால், தமிழகத்தில் பாஜக அகில இந்தியக் கட்சி கிடையாது, மாவட்ட கட்சி மட்டும் தான்” என்று பேசியிருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக பாஜக வட்டாரத்தில் தகவலறிந்த சிலரிடம் பேசினோம். “அந்தமானின் ஆளுநர் பதவிக்கு அண்ணாமலை முயற்சி செய்கிறார் என்பது முழுக்க முழுக்க தவறான தகவல். ஒரு யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநராக முயற்சி செய்வாரா என்ன? அவரின் இலக்கு வேறு. தமிழிசை தெலங்கானாவில் ஆளுநர். கூடுதல் பொறுப்பாகத் தான் புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல, எல்.முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது.

அண்ணாமலை 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான களப்பணிகளை இப்போதிலிருந்தே தொடங்கிவிட்டார் என்பது தான் உண்மையான நிலவரம். அந்தத் தேர்தலில் அவர் கரூர் அல்லது ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவார். தேர்தல் வெற்றிபெறவேண்டும் என்பதற்கான பணிகளைத் தொடங்கிவிட்டார். அந்த தேர்தலில் வெற்றியடைந்து மேலே பாஜக ஆட்சி அமையுமானால், தனக்கு மத்திய அமைச்சர் பதவியைப் பெறுவதற்காக டெல்லி தலைமையிடத்தில் காய் நகர்த்தும் வேலையையும் செய்துவருகிறார். மத்திய அமைச்சர் பதவி தான் அவருடைய குறிக்கோளாக உள்ளது” என்று கூறினார்கள்.