தமிழ் புத்தாண்டையொட்டி, ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், பாஜக, பாமக, அதிமுக ஆகிய கட்சிகளின் முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
ஆனால், ஆளும் திமுக அரசு தேநீர் விருந்தை புறக்கணித்தது.
தமிழக தலைமைச் செயலர், உயரதிகாரிகள், காவல் துறை டிஜிபி, மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிள் உள்ளிட்டோரும் கலந்துகொள்ளவில்லை.
அதேநேரம், தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது:
நாம் இருவருமே அரசமைப்பு கடமைகளை ஆக்கபூர்வமாக நிறைவேற்றினால் மட்டுமே, மாநிலம் வளர்ச்சி பெறும். தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதி நமது உறவு இனிமையாகவும் அன்பாகவும் தொடரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்று அதில் தெரிவித்திருந்தார்.
ஆளுநர் தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணித்தது இது மூன்றாவது முறையாகும்.
தமிழக ஆளுநராக சென்னா ரெட்டி இருந்தபோது, 1994 மற்றும் 1995 ஆம் ஆண்டுகளில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தேநீர் விருந்தை புறக்கணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, ஆளுநர் மாளிகையில் தமிழ் கவிஞர் சுப்ரமணிய பாரதியின் முழு உருவச் சிலையை ஆளுநர் ரவி திறந்து வைத்தார். பாரதியாரின் கொள்ளுப் பேரனையும் கெளரவித்தார்.
தேநீர் விருந்து புறக்கணிப்புக்கு காரணம் என்ன?
நீட் தேர்வுக்கு விலக்குக் கோரி சட்டசபையில் இரண்டு முறை மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.
ஆனால், அவர் அந்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தி வருகிறார்.
இந்நிலையில், தமிழக ஆளுநர் ரவியை மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியம், தமிழ் கலாசாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் நேற்று சந்தித்துப் பேசினர்.
அதன்பிறகு, அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தபோது நீட் விலக்கு மசோதா தொடர்பாக ஆளுநர் எதுவும் தெரிவிக்கவில்லை என்று தெரிவித்தனர்.
மேலும், இதன் காரணமாகவே நாங்கள் தேநீர் விருந்தை புறக்கணிக்கப் போவதாகவும் கூறியிருந்தனர்.
அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசு மேலும் கூறியதாவது:
2021ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி தமிழக சட்டசபையில் நீட் விலக்கு மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 142 கழித்து அந்த மசோதா மறுபரிசீலனைக்காக திருப்பி அனுப்பப்பட்டது.
இதையடுத்து, இரண்டாவது முறையாக கடந்த பிப்ரவரி மாதம் 8-ஆம் தேதி மீண்டும் ஒரு மனதாக மசோதா நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது.
மார்ச் 15ஆம் தேதி ஆளுநரை சந்தித்து இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குமாறு முதல்வர் கோரிக்கை விடுத்தார். குடியரசுத் தலைவருக்கு மசோதாவை அனுப்புவதாக ஆளுநரும் உறுதி அளித்தார். ஆனாலும், அவர் நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் நிலுவையில் வைத்துள்ளார்.
ஆளுநர் மாளிகை விழாவில் பங்கேற்றது ஏன்? அ.தி.மு.க, ஜி.கே வாசன் விளக்கம்!
இந்த விவகாரத்தை பிரதமர் மோடியிடமும் முதல்வர் ஸ்டாலின் எடுத்துரைத்தார். இருப்பினும், நீட் விலக்கு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் இருப்பது, தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவில்லை என்பதை பிரதிபலிக்கிறது.
காலதாமதம் செய்வதால் மாநில சட்டசபையின் மரியாதை கேள்விக்கு உள்படுத்தப்பட்டுள்ளது. ஆளுநர் ஒப்புதல் அளித்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பினால் மட்டுமே மத்திய அரசு இதை பரிசீலனையில் எடுத்துக் கொள்ளும். அப்போது தான் வரும் கல்வி ஆண்டிலாவது தமிழக மாணவர்கள் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்வியில் சேர முடியும் என்றார் தங்கம் தென்னரசு.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “