புதுடெல்லி: `அமெரிக்காவில் கடந்தாண்டு வழங்கப்பட்ட எச்-1பி விசாக்களில் 3.01 லட்சம் விசாக்களை இந்தியர்கள் பெற்றுள்ளனர். இது ஒட்டு மொத்தமாக வழங்கிய எச்-1பி விசாவில் 74 சதவீதமாகும்,’ என்று அமெரிக்க உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் வேலை செய்வதை கனவாக கொண்டவர்கள் உலகம் முழுவதும் உள்ளனர். இவர்களுக்கு ஆண்டுதோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே எச்-1பி விசாவை அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் துறை வழங்கி வருகிறது. கடந்த 2021ம் ஆண்டில் இந்த விசாவை வழங்கக் கோரி விண்ணப்பம் செய்தவர்களில் 4.07 லட்சம் பேருக்கு விசா வழங்கப்பட்டு இருக்கிறது. இதில், 3.01 லட்சம் விசாக்களை இந்தியர்களே பெற்றுள்ளனர். கடந்த 2020ல் 4.26 லட்சம் விசாக்கள் வழங்கப்பட்டன. அப்போது, இந்தியர்களுக்கு 3.19 லட்சம் விசாக்கள் கிடைத்தன. இந்த 2 ஆண்டுகளிலும் இந்தியர்களே 74 சதவீத எச்-1பி விசாக்களை பெற்றுள்ளனர். அதே நேரம், கடந்தாண்டில் 50,328 சீனர்களுக்கு மட்டுமே எச்-1பி விசா கிடைத்துள்ளது. இதுவே, 2020ம் ஆண்டில் 51,597 பேருக்கு வழங்கப்பட்டது. வழக்கம் போல, கடந்தாண்டும் கணினி தொடர்பான பணியில் உள்ள 2.80 லட்சம் பேருக்கு எச்-1பி விசா வழங்கப்பட்டுள்ளது. இது மொத்தம் விண்ணப்பித்தவர்களில் 68.8 சதவீதமாகும். இவர்களில் 56.6% முதுகலைப் பட்டம் பெற்றவர்கள். 33.7 % பேர் இளங்கலைப் பட்டம், 6.8 % பேர் முனைவர் பட்டம், 2.9 % தொழில்நுட்பக் கல்வி பட்டம் பெற்றவர்கள். இவர்களின் சராசரி சம்பளம் கடந்த நிதியாண்டை விட 6.9% உயர்ந்து ரூ.82,08,000 ஆக உள்ளது.