அயோத்தி:
குடியரசு துணைத்தலைவர் எம்.வெங்கையா நாயுடு, தமது மனைவி உஷா நாயுடுவுடன், வரலாற்றுச் சிறப்புமிக்க அயோத்தி மாநகருக்குச் சென்று, அங்குள்ள ராமபிரான் அவதரித்த இடம் மற்றும் ஹனுமன் கோவிலில் பூஜை செய்து வழிபட்டார்.
சிறப்பு ரயில் மூலம் அயோத்தி வந்த குடியரசு துணைத் தலைவரை ரயில் நிலையத்தில், உத்தரப்பிரதேச ஆளுனர் ஆனந்திபென் படேல், துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா உள்ளிட்டோர் வரவேற்றனர்.
புதிதாக கட்டப்படும் ராமர்கோவில் குறித்து, ராம் ஜென்ம பூமி தீர்த்த அறக்கட்டளை உறுப்பினர்கள், 3-டி குறும்படம் வாயிலாக வெங்கையா நாயுடுவிடம் விரிவாக விளக்கிக் கூறினர். பின்னர் ராமர்கோவில் கட்டப்படும் இடத்தில் உள்ள கர்ப்பகிரகஹத்தில் அவர் பூஜை நடத்தி வழிபாடு செய்தார்.
பின்னர் அங்குள்ள பார்வையாளர் புத்தகத்தில் எழுதியுள்ள குறிப்பில் குடியரசு துணைத்தலைவர் எம்.வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளதாவது:
ராம்ஜென்ம பூமியைப் பார்வையிடும் வாய்ப்புக் கிடைத்தது, ஒரு நிண்ட நேசத்துக்குரிய கனவு நிறைவேறுகிறது. ராமபிரான் நமது கலாச்சாரம், நற்பண்புகள் மற்றும் செழுமையான வரலாற்றின் அடையாளமாகத் திகழ்கிறார்.
ராமரின் வாழ்க்கை இந்திய மக்களுக்கு எப்போதும் உத்வேகம் அளிப்பதுடன், அவர்களுக்கான சரியான பாதையையும் காட்டுகிறது. அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோவில் கட்டுவது, இந்தியாவில் ஆன்மீக மறுமலர்ச்சியின் அடையாளமாகக் கருதப்படுகிறது.
இந்தக் கோவில், நமது செழுமையான பாரம்பரியத்தைப் போற்றும்படி வருங்கால சந்ததியினருக்கு உத்வேகம் அளிப்பதோடு, உண்மை, நீதி மற்றும் சகோதரத்துவத்திற்கான பாதையையும் காட்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் அயோத்தியில் உள்ள அனுமார் கோவிலிரும் வெங்கையா நாயுடு வழிபட்டனர்.
இதையும் படியுங்கள்…
15 ஆண்டுகளில் அகண்ட பாரதம் சாத்தியமாகும் – ஆர்எஸ்எஸ் தலைவர் பேச்சு