திருமலை: ஆந்திராவில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் நள்ளிரவு பயங்கர தீ விபத்தில் 6 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். ஆந்திர மாநிலம், ஏலூர் மாவட்டம், அக்கிரெட்டிகூடம் பகுதியில் தனியார் ரசாயன தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் ெதாழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். நள்ளிரவு 4வது யூனிட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த ரசாயனம் மற்றும் அதற்கு தேவையான பொருட்கள் மீது தீ பரவியது. இதனால் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த தரைத்தளத்தில் இருந்த தொழிலாளர்கள் உடனடியாக தொழிற்சாலையை விட்டு வெளியே ஓடி வந்தனர். ஆனால், தீ விபத்து நடந்த 4வது யூனிட்டில் 19 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். அவர்கள் தங்களை காப்பாற்றுமாறு கூச்சலிட்டனர். சக தொழிலாளர்கள் அவர்களை மீட்க முயன்றனர். ஆனால், கொழுந்து விட்டு தீ எரிந்ததால் உள்ளே சென்று தொழிலாளர்களை மீட்க முடியவில்லை. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், உள்ளே இருந்தவர்களை மீட்கவும் முயன்றனர். ஆனால், 6 பேர் உடல் கருகி சடலங்களாக மீட்கப்பட்டனர். மேலும், 13 தொழிலாளர்கள் பலத்த தீக்காயத்துடன் மீட்கப்பட்டனர். அவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் மேலும் ஒரு தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து முசனூர் மண்டல போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் பலியானவர்கள் முசனூர் மண்டலத்தை சேர்ந்த கிரண்குமார் (42), பீகார் மாநிலத்தை சேர்ந்த காரு ரவிதாஸ் (40), மனோஜ் குமார் (25), சுவாஷ் ரவிதாஸ் (32), அப்தாஸ் ரவிதாஸ் (27), ஆந்திர மாநிலம், ரெட்டிகுண்டம் மண்டலத்தை சேர்ந்த உத்ருபதி கிருஷ்ணய்யா (34) என்பது தெரியவந்தது. விபத்து குறித்து விசாரணை நடத்தும்படி முதல்வர் ஜெகன் மோகன் உத்தரவிட்டுள்ளார்.* தலா ரூ.25 லட்சம் நிதியுதவிதீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.5 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கும்படி முதல்வர் ஜெகன் மோகன் உத்தரவிட்டுள்ளார். இதேபோல், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்குவதாக தொழிற்சாலை நிர்வாகமும் தெரிவித்துள்ளது. தெலங்கானா மாநிலம், செகந்திராபாத் அருகே உள்ள இரும்பு தொழிற்சாலையில் கடந்த மாதம் நடந்த தீ விபத்தில், வெளிமாநிலங்களை சேர்ந்த 11 தொழிலாளர்கள் கருகி பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.