விஜயவாடா: ஆந்திர மாநிலத்தின் ஏலூரு மாவட்டம் முசுனூரு மண்டலத்தில் அக்கிரெட்டிகுடம் என்ற கிராமம் உள்ளது. இங்கு போரஸ் லேபரேட்டரீஸ் என்ற பெயரில் மருத்துவ ரசாயனம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையின் 4-வது உற்பத்தி பிரிவில் நேற்று முன்தினம் இரவு சுமார் 150 தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது கொதிகலன் ஒன்றிலிருந்து இரவு 11.40 மணியளவில் அபாயகரமான வாயுக் கசிந்து, வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் அதே இடத்தில் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆழந்த துயரம் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும் நிவாரண உதவி அறிவித்துள்ளார்.