சென்னை:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் திருமுல்லைவாயல் மற்றும் ஆவடியில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று 197 நரிக்குறவர் பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார்.
முதல் நிகழ்ச்சியாக இன்று காலை திருமுல்லைவாயல் ஜெயாநகர் நரிக்குறவர் குடியிருப்பில் பயனாளிகளுக்கு குடும்ப அட்டை, முதியோர் உதவித் தொகை, முதல்- அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டைகளை வழங்கினார்.
இதில் 39 பேருக்கு மருத்துவ காப்பீடு அட்டைகளையும், 20 பேருக்கு குடும்ப அட்டைகளையும், 4 பேருக்கு தலா ரூ.1000 முதியோர் உதவித்தொகையையும் வழங்கினார். பின்னர் சாலையோர வியாபாரிகள் 38 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் கடன் உதவிகளை வழங்கினார்.
அதன்பிறகு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவடி பஸ்நிலையம் அருகில் உள்ள நரிக்குறவர் குடியிருப்புக்கு சென்றார். அங்கு புதிதாக அமைக்கப்பட்ட உயர் கோபுர விளக்குகள் மற்றும் குடிநீர் குழாயை திறந்து வைத்தார். பின்னர் நரிக்குறவர் மாணவிகள் எஸ்.தர்ஷன், ஆர்.பிரியா, கே.திவ்யா ஆகியோருடன் கலந்துரையாடினார். மாணவிகள் மு.க.ஸ்டாலினுக்கு புத்தகம் பரிசாக வழங்கினார்கள்.