திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் உள்ள நரிக்குறவர்கள் குடியிருப்புக்குச் சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு வழங்கப்பட்ட தேநீர், இட்லி உள்ளிட்டவைகளை சாப்பிட்டார்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி பேருந்து நிலையம் பின்புறம் நரிக்குறவர்இன மக்கள் வசிக்கும் குடியிருப்பு வளாகம் உள்ளது. இங்கு நரிக்குறவர் இன மக்கள் 180-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் திவ்யா,பிரியா, தர்ஷினி ஆகியோர், தாங்கள் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதால், அரசுப் பள்ளி உள்ளிட்ட இடங்களில் சந்திக்கும் சமூக புறக்கணிப்பு உள்ளிட்டவை குறித்து, விரிவாகப் பேசிய காணொலி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
இதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் பள்ளி மாணவிகள் திவ்யா, பிரியா, தர்ஷினி ஆகியோரை தலைமைச் செயலகத்துக்கு நேரில் அழைத்துப் பேசினார். அப்போது, அவர்மாணவிகளின் கல்விக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக உறுதியளித்தார்.
இந்நிலையில் பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் கடந்த மார்ச் 17-ம் தேதி ஆவடி நரிக்குறவர் இன மக்கள் வசிக்கும் குடியிருப்பு வளாகத்துக்குச் சென்று, நரிக்குறவர் இன மக்களின் குறைகளைக் கேட்டார்.அப்போது, அமைச்சரின் செல்போன் மூலம் வீடியோ காலில் நரிக்குறவர் இன மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் பேசி, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.
அப்போது நரிக்குறவர் இன மக்களிடம் முதல்வர், “உங்களைச் சந்திக்க ஆவடிக்கு இன்னும் ஒரு வாரத்தில் நேரில் வருகிறேன். அப்போது உங்களுடைய குறைகளைக் கேட்டுஅதை நிவர்த்தி செய்வேன். நான் உங்கள் வீட்டுக்கு வந்தால் சோறு போடுவீர்களா?’ எனக் கேட்டார்.
அதற்கு நரிக்குறவர் இன மக்கள், “கறி சோறு போடுகிறோம். நீங்கள் எங்கள் குடியிருப்புக்கு வந்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைவோம்.எங்களுக்கு அளிக்கப்படும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழைப் பழங்குடியினர் சான்றிதழாக வழங்க வேண்டும்” எனக் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்நிலையில், இன்று (ஏப்.15) ஆவடி நரிக்குறவர் குடியிருப்பில் உள்ள மாணவி திவ்யாவின் வீட்டிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றார். அப்போது முதல்வருக்கு நரிக்குறவர்கள் விற்பனை செய்யக்கூடிய பாசிமணிகள் மாலையாக அணிவிக்கப்பட்டது.
தேநீர்… இட்லி நாட்டுக்கோழி: பின்னர், குமார் என்பவர் வீட்டில் தயாரிக்கப்பட்ட தேநீர் வழங்கப்பட்டது. மேலும், முதல்வருக்கு ஏற்கெனவே கொடுத்திருந்த வாக்குறுதியின்படி நாட்டுக்கோழி குழம்பும் இட்லியும் சமைத்து வைத்திருப்பதாகவும், அதனை முதல்வர் சாப்பிட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. இதனை ஏற்று முதல்வர் ஸ்டாலின் அங்கு சாப்பிட்டார்.
காரமாக தான் சமைப்பீர்களா? உணவருந்திய முதல்வர் ஸ்டாலின் காரமாகத்தான் சமைப்பீர்களா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு ஆமாம், அப்போதுதான் சளி தொந்தரவு எதுவும் வராது. முதல்வர் எங்கள் வீட்டில் உணவருந்துவது கனவு போல் உள்ளது என்று கூறினார். மாணவி திவ்யா, சாப்பாடு நல்லா இருக்கிறதா என்று கேட்க, கறி நன்றாக உள்ளது, காரமாக இருக்கிறது என முதல்வர் பதிலளித்தார்.
பின்னர் அந்த குடியிருப்பில் உள்ள மாணவிகள் வழங்கிய பரிசுப்பொருட்களையும், மலர் கொத்துக்களையும், பாசிமணிகளையும் பெற்றுக் கொண்டார். பள்ளி மாணவிகளுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். பின்னர் நரிக்குறவ மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
சீருடையில் மாணவிகள்…. தமிழகம் முழுவதும் ஏப்.14 முதல் ஏப்.17 வரை தொடர் விடுமுறை நாட்கள். குறிப்பாக, ஏப்.16 சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை என்று தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்துவிட்டது. இந்நிலையில், இன்று ஆவடிக்கு குடியிருப்புக்கு தமிழக முதல்வர் சென்றிருந்தபோது, மாணவி திவ்யா உள்ளிட்ட அனைத்து மாணவர்களும் சீருடையில் இருந்தது கவனித்தக்கது.