புதுடெல்லி,
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர்களைப்போல இயற்கை எரிவாயுவின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்தவகையில் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவின் (சி.என்.ஜி.) விலை நேற்றும் கிலோ ஒன்றுக்கு ரூ.2.50 அதிகரித்தது. இதற்கு மத்திய அரசை காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியுள்ளது. இது எரிபொருள் கொள்ளை என வர்ணித்து உள்ளது.
இது குறித்து கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தனது டுவிட்டர் தளத்தில், ‘மோடி அரசின் எரிபொருள் கொள்ளை திட்டத்தால் பணவீக்கம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இன்று, (நேற்று) சி.என்.ஜி. விலை மேலும் ரூ.2.50 அதிகரித்து இருக்கிறது’ என குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர், விலைவாசி உயர்வில் எத்தனை சாதனைதான் படைக்கப்படும்? இன்னும் எத்தனை பேரழிவை ஏற்படுத்தும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.