கொழும்பு,
அண்டை நாடான இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கிறது. அன்னியச்செலாவணி கையிருப்பு கரைந்து போனது. அடுத்த 5 ஆண்டுகளில் 25 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1 லட்சத்து 87 ஆயிரத்து 500 கோடி) வெளிநாட்டு கடன்களை திருப்பிச்செலுத்த வேண்டிய நெருக்கடியும் உள்ளது. இந்த ஆண்டு மட்டுமே 7 பில்லியன் டாலர் கடனை (சுமார் ரூ.52 ஆயிரத்து 500 கோடி) திருப்பிச்செலுத்த வேண்டிய நெருக்கடி உள்ளது.
ஆனால் சர்வதேச நிதியத்துடனான கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை முடிக்கிறவரையில், வெளிநாட்டு கடன்களை திருப்பி செலுத்துவதை நிறுத்தி வைப்பதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.
இந்த சூழலில் விலைவாசி ஒவ்வொரு நாளும் விஷம் போல உயர்ந்து வருகிறது. எரிபொருள் பற்றாக்குறையும், 10 மணி நேரத்துக்கு மேற்பட்ட மின்வெட்டும் மக்களை அல்லாட வைத்துள்ளது. போராட்டக்களத்திலும் குதிக்க வைத்துள்ளது.
நாட்டின் இந்த பொருளாதார நெருக்கடிக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சேதான் காரணம் என்று கூறி அவர் பதவி விலக வலியுறுத்தி தலைநகரான கொழும்பு நகரில் உள்ள அவரது அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் மக்கள் 6-வது நாளாக போராடி வருகிறார்கள். கோத்தபய ராஜபக்சேயின் குடும்பத்தினர் ஆட்சி அதிகாரத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் அவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று தமிழ் புத்தாண்டு மற்றும் சிங்கள புத்தாண்டு பிறந்தது. இந்த புத்தாண்டை போராட்டக்காரர்கள் அதிபர் அலுவலகத்துக்கு வெளியே போராட்டக்களத்தில் கொண்டாடினர். ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். அத்துடன் பால் சாதம், கேக் ஆகியவற்றையும் பகிர்ந்து கொண்டனர்.
மக்கள் போராட்டத்திற்கு வெற்றி என்றும் அவர்கள் முழங்கினர்.
இந்த போராட்டத்தில் தனது கணவர் மற்றும் முறையே 8, 10 வயதான தனது மகன்களுடன் ஈடுபட்டுள்ள குடும்பத்தலைவி திலானி நிரஞ்சலா கூறும்போது, “மற்ற நாட்களில் எங்கள் குழந்தைகள் புத்தாண்டைக் கொண்டாட அவர்களது தாத்தா, பாட்டிகளிடம் செல்வார்கள். ஆனால் இன்று நாட்டின் உண்மையான நிலையை அவர்களுக்கு காட்ட வேண்டும் என்பதற்காக இங்கு அழைத்து வந்திருக்கிறோம். நாட்டில் என்ன நடக்கிறது என்று அவர்களிடம் பொய் சொல்லிவிட்டு, எங்கள் கிராமத்துக்குப்போய் புத்தாண்டைக் கொண்டாட நாங்கள் விரும்பவில்லை. அவர்கள் உண்மையைப் பார்க்க வேண்டும். உண்மையுடன் வாழ வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
திலானி நிரஞ்சலாவின் கணவர் உசித கமகே டாக்சி டிரைவர் ஆவார். அவர், “தினந்தோறும் விலைவாசி உயர்ந்து வருவதைப் பார்க்கிறபோது ஊக்கம் குறைகிறது. எனவே இந்த போராட்டத்தில் மகிழ்ச்சியுடன் பங்கேற்கிறோம். இது எனக்கு புதிய நம்பிக்கையை, சக்தியைத் தருகிறது. அவர்களை (அதிபர் குடும்பத்தினர்) விரட்டியபின்னர், எங்களுக்கு நன்றாக இருக்கும். இதைத்தான் நான் என் குழந்தைகளுக்கு கூறினேன்” என்று தெரிவித்தார்.
இதற்கு மத்தியில் இலங்கை எதிர்க்கட்சி ஜனதா விமுக்தி பெரமுனா கட்சி, கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக 17-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை 3 நாட்கள் பேரணிகளை நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.