மாஸ்கோவ்: உக்ரைனின் தேசியவாத அமைப்புகள் ரஷ்ய எல்லைப் பகுதிகளில் நடத்தும் தாக்குதல்களுக்கு பதிலடியாக கீவ் நகரத்தின் மீதான ஏவுகணைத் தாக்குதல்கள் அதிகரிக்கப்படும் என ரஷ்யா எச்சரித்துள்ளது.
ரஷ்யாவின் ராணுவ அமைச்சகம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
கீவ் நகருக்கு வெளியே இருக்கும் ராணுவத் தொழிற்சாலை ஒன்றின் மீது வியாழக்கிழமை பிற்பகுதியில், கடலில் இருந்து நீண்ட தூர இலக்குகளைத் தாக்கியழிக்கும் காலிபர் ரக ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. ஜூலியான்ஸ்கி எந்திர கட்டுமான ஆலையான “விசார்” மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் காரணமாக, நீண்ட மற்றும் நடுத்தர தூரம் தாக்கும் ஏவுகணை உற்பத்தி மற்றும் பழுதுபார்க்கும் தொழிற்சாலை அழிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் அரசு வியாழக்கிழமை அந்நாட்டுக்கு அருகில் இருக்கும் ரஷ்யாவின் பிரையன்ஸ்க் பகுதியில் தாக்குதல் நடத்துவதற்காக ஹெலிகாப்டர்களை அனுப்பியுள்ளது. இந்தத் தாக்குதலில் எட்டுபேர் காயமடைந்துள்ளனர். அதேநாளில் ரஷ்யாவின் எல்லைப்பகுதியான பெல்கோர்ட் கிராமத்தில் உக்ரைன் ஷெல் தாக்குதல் நடத்தியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இங்கிருந்து மக்கள் வெளியேற்றப்படிருந்ததாக அப்பிராந்தியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்
ரஷ்யப்பகுதிகளில் உக்ரைன் தேசியவாதிகளால் நடத்தப்படும் தாக்குதல்கள், நாச வேலைகளுகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, உக்ரைன் தலைநகர் கீவ்-ல் ஏவுகணைத் தாக்குதல்கள் அதிகரிக்கப்படும்.
இவ்வாறு ரஷ்ய ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல்களை தாங்கள் நடத்தவில்லை என்று மறுத்துள்ள உக்ரைன் அரசு, ரஷ்யாவில் உக்ரைனிய எதிர்ப்பு வெறியைத் தூண்டுவதற்காக இந்த தாக்குதல்கள் அரங்கேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.