இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் பதிவு செய்யப்பட்ட அனைத்து எரிபொருள் பவுசர் உரிமையாளர்களுக்கும் விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, போதுமான அளவு எரிபொருள் கையிருப்பு இருப்பதால், எரிபொருள் விநியோக செயல்முறையை விரைவுபடுத்துவதற்காக, குறிப்பிட்ட முனையங்கள் மற்றும் டிப்போக்களுக்கு தங்கள் பவுசர்களை உடனடியாக அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை,எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்திருந்தது.
இந்த நடைமுறைக்கு அமைய உந்துருளிகளுக்கு 1,000, ரூபாவுக்கும், முச்சக்கர வாகனங்களுக்கு 1,500 ரூபாவுக்கும் சிற்றூந்துகள்,வேன்கள் மற்றும் ஜீப்புகளுக்கு 5,000 ரூபாவுக்கும் எரிபொருள் விநியோகம் செய்யப்படவுள்ளது.
எனினும் பேருந்துகள், பாரவூர்திகள் மற்றும் வர்த்தக வாகனங்களுக்கு இது பொருந்தாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.