ஒப்பந்ததாரர் தற்கொலை விவகாரம் – கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா ராஜினாமா

பெங்களூரு: ஒப்பந்ததாரர் தற்கொலையில் குற்றம் சாட்டப்பட்ட கர்நாடக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஈஸ்வரப்பா தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் பசவராஜ் பொம்மையிடம் வழங்கினார்.

கர்நாடகாவைச் சேர்ந்த சந்தோஷ் பாட்டீல் என்ற ஒப்பந்ததாரர் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று உடுப்பியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். தனது தற்கொலைக்கு மாநிலத்தின் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஈஸ்வரப்பா தான் முழுக்காரணம் எனத் தனது கடைசி தொலைப்பேசி செய்தியில் அமைச்சரின் பெயரைக் குறிப்பிட்டிருந்தார். நண்பர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு அவர் கடைசியாக அனுப்பிய வாட்ஸ் அப் செய்திகளில் பிரதமர் மோடியையும் குறிப்பிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

“தான் எந்த தவறும் செய்யவில்லை ராஜினாமா என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று கூறி வந்த அமைச்சர் ஈஸ்வரப்பா, எதிர்கட்சிகளின் கடுமையான அழுத்தம் காரணமாக அமைச்சரவையில் இருந்து விலகுவதாக வியாழக்கிழமை தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து ஈஸ்வரப்பா இன்று (வெள்ளிக்கிழமை) இரவு மாநில முதல்வர் பசவராஜ் பொம்மையைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார். முன்னதாக துமகுருவில் உள்ள ஸ்ரீ சித்தகங்கா மடத்துக்குச் சென்று அங்கு பிரார்த்தனை செய்தார்.

தனது ராஜினாமா கடிதத்தை கொடுப்பதற்கு முன்பாக ஈஸ்வரப்பா, “என் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது. அதிலிருந்து நான் வெளியே வரவேண்டாமா. நான் நிரபராதி என நிரூப்பிக்கப்பட வேண்டுமானால், விசாரணை நடக்கும் போது நான் அமைச்சராக தொடரக் கூடாது. அப்படி நடந்தால் நான் விசாரணையில் செல்வாக்கு செலுத்தலாம் என்ற எண்ணம் ஏற்படலாம். அதனால் ராஜினாமா செய்கிறேன். குற்றச்சாட்டுகளில் இருந்து தனது பெயர் நீக்கப்பட்ட பிறகு மீண்டும் அமைச்சரவைக்கு திரும்ப வருவேன்” என்று தெரிவித்தார்.

ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல், ஊரக வளர்ச்சித் துறைக்கு செய்த பணிக்கான ரூ.4 கோடி பில் தொகையை சரி செய்ய அமைச்சர் ஈஸ்வரப்பா 40 சதவீதம் லஞ்சமாக கேட்டதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.