பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெலகாவியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல் (40). இவர் தன்னிடம் மாநில ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஈஸ்வரப்பா 40 சதவீத கமிஷன் கேட்பதாக குற்றம் சாட்டினார். இதனால் அவர் மீது ஈஸ்வரப்பா வழக்கு தொடுத்ததால் இருவருக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்நிலையில் கடந்த 12-ம் தேதி சந்தோஷ் பாட்டீல் தற்கொலை செய்துகொண்டார்.
இதையடுத்து சந்தோஷ் பாட்டீலின் குடும்பத்தார், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் ஈஸ்வரப்பாவுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். இதனால் சந்தோஷ் பாட்டீலை தற்கொலைக்கு தூண்டியதாக அமைச்சர் ஈஸ்வரப்பா, அவரது உதவியாளர்கள் ரமேஷ், பசவராஜ் ஆகியோர் மீது உடுப்பி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் சித்தராமையா, மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார் உள்ளிட்டோர் ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து, ஈஸ்வரப்பாவை பதவியில் இருந்து நீக்க மனு அளித்தனர்.
ஈஸ்வரப்பாவுக்கு பாஜகவுக்கு உள்ளேயும் எதிர்ப்புகள் எழுந்தன. அவரால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுவதாக பாஜக மேலிடத்தில் மூத்த தலைவர்கள் முறையிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று ஈஸ்வரப்பா, “சாமுண்டீஸ்வரி மீது ஆணையாக சொல்கிறேன். எனக்கும், சந்தோஷ் பாட்டீலுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. ஆனால் காங்கிரஸார் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் என் மீது எந்த தவறும் இல்லை என விரைவில் நிரூபிப்பேன். அதுவரை அமைச்சர் பதவியில் இருந்து விலகியிருக்க முடிவெடுத்துள்ளேன். வெள்ளிக்கிழமை முதல்வர் பசவராஜ் பொம்மையை சந்தித்து எனது ராஜினாமா கடிதத்தை வழங்க இருக்கிறேன்” என்றார்.
இதுகுறித்து முதல்வர் பசவராஜ் பொம்மை கூறுகையில், “பிரேதப் பரிசோதனை முடிந்து சந்தோஷ் பாட்டீலின் உடல் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் எத்தகைய தலையீடும் இல்லாமல் முறையான விசாரணை நடைபெறும்” என்றார்.