வைகையாற்றில் தண்ணீர் அதிகளவில் வருவதால் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வின்போது பக்தர்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.
கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்விற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நாளை காலை 5.50 மணி முதல் 6.20 மணிக்குள் தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் கம்பீரமாக வைகையாற்றில் எழுந்தருள உள்ளார்.
இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ள நிலையில், வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்விற்காக கடந்த 11ம் தேதி வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு தண்ணீர் கரைபுறண்டு ஓடுகிறது. இதையடுத்து தண்ணீர் அதிகளவில் வருவதால் ஆற்றுக்குள் பக்தர்கள் இறங்க வேண்டாம் என ஆட்சியர் அனீஷ் சேகர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் வைகையாற்றின் கரையோரங்களில் நின்று பக்தர்கள் கள்ளழகரை தரிசிக்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பக்தர்கள் ஆற்றில் இறங்காமல் இருக்க தற்காலிக தடுப்புகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே கள்ளழகர் வைகையாற்றில் இறங்கி எழுந்தருளி நிற்பதற்காக வைகையாற்றின் நடுவே மண்டபப்படி அமைக்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து 2 டன் எடையில் 10 வகையான வண்ண மலர்களால் கள்ளழகர் எழுந்தருளும் மண்டபப்படி அலங்கரிக்கப்பட்டு வருகிறது.
நாளை நடைபெறும் இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் கள்ளழகர் வேடமணிந்து ஆட்டுதோல் பையில் தண்ணீரை நிரப்பி கள்ளழகரை மீது தண்ணீர் பீய்ச்சியடித்து வேண்டுதலை நிரைவேற்றுவர். இந்த நிகழ்வில் மதுரை மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து விழாவினை பார்க்க பொதுமக்கள் வருகை புரிவார்கள் என்பதால் 75 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது,
நாளை மதுரை மாவட்டதிற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில், விழாவையொட்டி மதுரை மாநகரில் போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்களும் செய்யபட்டுள்ளது. 3500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர், இதைத் தொடர்;ந்து கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்தும், ட்ரோன் மூலமாகவும் கண்காணிக்க காவல்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் சீருடை அணியாத காவல்துறையினர் 200க்கும் மேற்பட்டோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM