மூணாறு- -கேரளா மூணாறு அருகே சின்னக்கானல் வனப்பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானைகளை குறித்து டாக்டர் நரேந்திரவர்மா ஆய்வு செய்தார்.சின்னக்கானல் வனப்பகுதியில் காட்டு யானைகள் உயிர் சேதம் உள்பட பல்வேறு சேதங்களை ஏற்படுத்துவதால் அவற்றின் இயல்பை குறித்து வேட்டோதேரி, சிங்குகண்டம், சிமென்ட் பாலம் ஆகிய பகுதிகளில் மூணாறு டி.எப்.ஓ., ராஜூ பிரான்சிஸ், சின்னக்கானல் வனத்துறை அதிகாரி ஸ்ரீகுமார் ஆகியோரின் உதவியுடன் 2 நாட்கள் ஆய்வு செய்தார்.நரேந்திரவர்மா கூறுகையில், ”சின்னக்கானல் வனப்பகுதியில் மக்கள் நடமாட்டத்தை முடிந்த வரை குறைக்க வேண்டும். அங்கு சுற்றித்திரியும் 18 காட்டு யானைகளுக்கு தனியாக இடம் ஒதுக்க வேண்டும். குடியிருப்பு பகுதிகளைச் சுற்றி வேலி அமைக்க வேண்டும். சின்னக்கானலில் காட்டு யானைகள் வாழ்வதற்கு ஏற்ப புல்மேடுகளும், சோலைகளும் உள்ளன. கோடை காலம் தவிர எஞ்சிய நாட்களில் புல்மேடுகளில் தீவனம் தாராளம் கிடைக்கும். தீவனம் கிடைக்காத பட்சத்தில் விளை நிலங்களில் நுழைந்து விடுகின்றன. காய்கறி, பழங்கள் ஆகியவற்றை ஒருமுறை ருசித்தால் அங்கு பல ஆண்டு கழித்தும் வரும் அளவு யானைகளுக்கு ஞாபக சக்தி உண்டு. அதே போல் உப்பு, அரிசி ஆகியவை காட்டு யானைகளுக்கு கிடைக்காத வகையில் பாதுகாக்க வேண்டும். உணவு பொருட்களை ஆங்காங்கே வீசுவதும் யானைகளின் தொந்தரவுக்கு முக்கிய காரணமாகும்.” என்றார்.
Advertisement