டெல்லியில் உள்ள ஒரு மெட்ரோ நிலையத்திலிருந்து குதித்து பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். காவலர்கள் கண்முன்னே அவர் தற்கொலை செய்து கொள்ளும் பதைபதைக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு டெல்லியில் அக்ஷர்தம் மெட்ரோ ரெயில் நிலையத்தின் புளூ லைன் பிரிவில் உள்ள ஒரு கட்டடத்தின் மேல் பகுதிக்கு இளம்பெண் ஒருவர் நேற்று காலை 7.30 மணியளவில் சென்றுள்ளார். இதனை பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை காவலர்கள் ( CISF) கவனித்து உள்ளனர். காவலர்கள் மேலே சென்று பார்த்தபோது அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்தப் பெண் கட்டடத்தின் விளிம்பிற்குச் சென்று கீழே குதித்து தற்கொலை செய்ய தயாராகியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து, பணியில் இருந்த காவலர்கள் அந்த இளம்பெண்ணிடம் கீழே வரும்படி கெஞ்சி கேட்டுள்ளனர். அவரை சமரசப்படுத்தும் முயற்சியிலும் அவர்கள் ஈடுபட்டு உள்ளனர். இதில் அதிகாரிகள் சிலர், ஒருவேளை இளம்பெண் குதித்து விட்டால், அவரை காப்பாற்றுவதற்காக போர்வை ஒன்றை எடுத்துக் கொண்டு கீழ்ப்பகுதிக்குச் சென்றனர். சி.ஐ.எஸ்.எப். குழு ஒன்று உடனடியாக தரை தளத்திற்கு சென்று போர்வைகள், படுக்கை விரிப்புகள் ஆகியவற்றை அருகேயுள்ள கடைகளில் இருந்து வாங்கி வந்து பாதுகாப்பு வலை அமைப்பு ஒன்றை ஏற்படுத்தினர்.
காவலர்களின் சமாதானத்தை ஏற்க மறுத்த அந்தப் பெண் மெட்ரோ ரெயில் நிலைய கட்டடத்தில் இருந்து கீழே குதித்து விட்டார். அவர் சரியாக காவலர்கள் ஏற்கெனவே போர்வையை வைத்து தயார் செய்த பாதுகாப்பு வலையில் விழுந்தபோதும் படுகாயமடைந்து உள்ளார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், சிகிச்சைப் பலனின்றி அவர் நேற்று மாலை உயிரிழந்தார்.
#Salute to #CISF personal whose timely intervention saved a life at #Akshardham railway station.
*CISF personnel of #DMRC, Delhi prevented a #suicide at Akshardham #Metro Station, #Delhi*
Visual speaks it all. pic.twitter.com/zqZ3VqclXj
— Breaking News with Nitish kumar (@kumaarnitish) April 14, 2022
இறந்தப் பெண் பஞ்சாப்பின் ஹோசியார்பூர் பகுதியை சேர்ந்தவர். அரியானாவின் குருகிராமில் பணிபுரிந்து வந்துள்ளார். சமீபத்தில் அவர் வேலையில் இருந்து விலகிய நிலையில் மெட்ரோ ரெயில் நிலையத்தில் தற்கொலை செய்துள்ளார். தற்போது இச்சம்பவத்தில் உண்மையான காரணத்தை கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது. காவலர்கள் கெஞ்சிப் பேசிய போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை – 600 028.
தொலைபேசி எண் – (+91 44 2464 0050, +91 44 2464 0060)Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM