தங்கள் நாட்டு மண்ணில் தாக்குதல் நடத்தினால், உக்ரைன் தலைநகர் கீவ் மீது பதிலடி கடுமையாக இருக்கும் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் அடங்கிய நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷ்யா, கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி அந்நாட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் இன்று 51வது நாளை எட்டியுள்ளது. போர் பதற்றம் காரணமாக உக்ரைன் நாட்டில் இருந்து சுமார் 6 லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு தஞ்சம் அடைந்துள்ளாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, இரு நாட்டு எல்லையில் உள்ள பிரைன்ஸ்க் பகுதியில் வெடிகுண்டுகளை வீச உக்ரைன் ஹெலிகாப்டர்களை அனுப்பி வைத்ததாகவும், அதில் 8 பேர் காயமடைந்ததாக நேற்று ரஷ்யா குற்றம் சாட்டியது. ஆனால் இதனை மறுத்த உக்ரைன், ரஷ்யாவில் உக்ரைனுக்கு எதிர்ப்பு மனநிலையை அதிகப்படுத்த அந்நாடு முயற்சி செய்வதாக குற்றம் சாட்டினார்.
மறு உத்தரவு வரும் வரை முழு ஊரடங்கு – அரசு அறிவிப்பால் மக்கள் ஷாக்!
இந்நிலையில், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ரஷ்யாவில் தாக்குதல் நடத்த உக்ரைன் திட்டமிட்டாலோ அல்லது சதி செய்தாலோ, கீவ் நகரில் ஏவுகணை மூலம் கடுமையான தாக்குதல் நடத்துவது அதிகரிக்கப்படும். கீவ் நகருக்கு வெளியே உள்ள ராணுவ தொழிற்சாலைகள் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தின. இதில், கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள், நீண்ட தூரம் மற்றும் குறுகிய தூர விமானங்களை தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் அழிக்கப்பட்டன. ரஷ்யாவின் கிலிமோவா பிராந்தியத்தில் பொது மக்கள் மீது தாக்குதல் நடத்த வந்த உக்ரைனின் எம்ஐ- 8 ஹெலிகாப்டர்களை, எஸ்-400 ஏவுகணை அமைப்பு தாக்கி வீழ்த்தியது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.