கொரோனா விதி மீறிய விவகாரம் சூடு பிடிக்கிறது – இங்கிலாந்து நீதித்துறை மந்திரி திடீர் ராஜினாமா

லண்டன்,
இங்கிலாந்து நாட்டில் கடந்த 2020-ம் ஆண்டில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் அமலில் இருந்தன. பொதுஇடங்களில் மக்கள் கூடவும், விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் தடை போடப்பட்டிருந்தது.
ஆனால் அந்த ஆண்டின் ஜூன் மாதத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சனின் பிறந்த நாள் விருந்து, பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான லண்டன், எண், 10, டவுனிங் வீதியில் நடைபெற்றது. பல பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இது வெளியே அம்பலத்துக்கு வந்தது. இதை ஊடகங்கள் கடுமையாக விமர்சித்தன. ‘பார்ட்டி கேட்’ (விருந்து ஊழல்) என்று அழைத்து வருகின்றன. இதற்காக அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். ஆனாலும் அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்க்கட்சி வலியுறுத்தி வருகிறது.
இந்த விதி மீறலுக்காக பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும், நிதி மந்திரி ரிஷி சுனக்கிற்கும் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் இந்த விவகாரம் ஓயவில்லை. ஆளும் கட்சி எம்.பி.க்களில் ஒரு தரப்பினரும் பிரதமர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். இதனால் இந்த விவகாரம் சூடு பிடிக்கிறது.
இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டில் கடந்த 2020 டிசம்பர் மாதம் முதல் நீதித்துறை மந்திரி பதவியில் இருந்து வந்த டேவிட் வொல்ப்சன் திடீரென தன் பதவியை ராஜினாமா செய்து விட்டார். இவர் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது:-
கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் மீறல் என்பது சட்டத்தின் ஆட்சிக்கு முரணானது. எனது மந்திரி மற்றும் தொழில்சார் கடமைகளை கருத்தில் கொண்டு, நான் ராஜினாமா செய்வதைத் தவிர வேறு வழி இல்லை. டவுனிங் வீதியில் (பிரதமர் இல்லம்) என்ன நடந்தது, பிரதமரின் நடத்தை என்ன என்பது பற்றிய கேள்வி மட்டுமல்ல, என்ன நடந்தது என்பதற்கான அதிகாரப்பூர்வ பதில் அளிப்பு இது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
நீதித்துறை மந்திரி பதவி விலகல், பிரதமர் பதவி விலக மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். பிரதமர் போரிஸ் ஜான்சன் கட்டுப்பாடுகளை மீறி மேலும் 2 நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளதாகவும், அதற்காகவும் அவருக்கு அபராதம் விதிக்கப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இங்கிலாந்தில் குற்றம் செய்து அபராதத்துக்கு ஆளான முதல் பிரதமர் என்ற பெயரையும் போரிஸ் ஜான்சன் பெற்றுள்ளார் என்று அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.