பாகிஸ்தானை சேர்ந்த அர்ஷத் கானை உங்களுக்கு நினைவிருக்கிறதா ? நீல நிற கண்களுடன், டீ கடையில் தேநீர் வடிகட்டியுடன் இருக்கும் அர்ஷத்தை அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது.
பாகிஸ்தானை சேர்ந்த அர்ஷத் கான் ‘chaiwala’ என்று அனைவராலும் அறியப்படுகிறார். சமூக வலைதளங்கள் சிலரது வாழ்கையை அப்படியே தலைகீழாக மாற்றும். எதிர்பாராத புகழையும், செல்வத்தையும் ஒரே நேரத்தில் கொட்டும்.
அதே வேளையில் நேர்த்தியாகவும், நிதானமாகவும் எதிர்கொள்பவர்கள் தங்களுக்கான இருப்பை என்றைக்கும் நிலை நிறுத்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் அர்ஷத் கான்.
யார் இந்த அர்ஷத் கான்
அர்ஷத் கான் பாகிஸ்தானில் டீ க்கடை ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் 2016 -ம் ஆண்டு ஜியா அலி என்பவர் எடுத்த புகைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தார். அந்த புகைப்படம் அவரது வாழ்க்கையை மாற்றியது. சமூக வலைதளங்களில் ஒரே நாளில் அவர் வைரலானார். இதனைத் தொடர்ந்து அவருக்கு மாடலிங் வாய்ப்புகளும், பாகிஸ்தான் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் கிடைத்தன. இதில் மாடலிங் மற்றும் விளம்பரப் படங்களில் அர்ஷத் நடித்தார். இது அவரை பாகிஸ்தான் மக்களிடம் மிக நெருக்கமாக கொண்டு சென்றது.
இதனைத் தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு இஸ்லாமாபாத்தில் சொந்தமாக கஃபே (Cafe chaiwala Rooftop) ஒன்றை அர்ஷத் தொடங்கினார்.
அப்போது, ”பலரும் chaiwala என்ற பெயரை நீக்குமாறு கூறினர். ஆனால் நான் அதனை ஏற்கவில்லை. அது தனக்கான அடையாளம் என்று அர்ஷத் கூறியிருந்தார்.
அர்ஷத்தின் இந்த ’Cafe chaiwala Rooftop’-பாகிஸ்தானில் பலத்த வரவேற்பு பெற்றது. உலகம் முழுவதும் இருந்து வந்திருந்த யூ டியூபர்கள் அவரது கடையை தங்களது சேனல்களில் பதிவுச் செய்தனர். இதனால் அர்ஷத்தின் முகம் மீண்டும், மீண்டும் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு லண்டனில் அர்ஷத் புதிய கடையை திறக்க இருப்பதாகவும், தனது கடமையை சர்வதேச அளவில் திறப்பது குறித்து ஆவலாக இருப்பதாக ஊடகங்களுக்கு பேட்டியளித்திருந்தார்.
வாழ்வில் அற்புதங்கள் எப்போதாவது.. யாருக்காவது நிகழும்.. அது நிகழும்வரை காத்திருக்க வேண்டும். அர்ஷத் அதற்காகவே காத்திருந்திருந்தார். அது நிகழ்ந்திருக்கிறது