சாலையோரம் நின்ற கார்மீது ஏறி நசுக்கிய லாரி – 2 பேர் மரணம்; டிரைவர் தப்பியோட்டம்

சீர்காழி அருகே ஆலங்காடு பகுதியில் சாலையோரம் நின்ற கார் மீது கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. உருகுலைந்த காரின் ஓட்டுநர் உட்பட இருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடினார்.
திருவாரூர் மாவட்டம் கொல்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பதர் நிஷா (72). இவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் மலேசியா கோலாலம்பூர் செல்வதற்காக இன்று காலை வாடகை காரில் சென்றிருக்கிறார். திருவாரூர் மாவட்டம் கொல்லாபுரம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணசந்தர் (44) என்பவர் காரை ஓட்டிச் சென்றுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஆலங்காடு பகுதியில் சாலையோரம் காரை நிறுத்திவிட்டு உள்ளேயே அமர்ந்து உணவு உட்கொண்டுள்ளனர். அப்போது பின்னால் சீர்காழி நோக்கி அதிவேகமாக வந்த டாரஸ் லாரி கட்டுப்பாட்டை இழந்து முன்னே நின்ற காரின்மீது மோதி சில அடி தூரம் இழுத்துச்சென்று ஒரு வீட்டின் சுவற்றை உடைத்து காரின் மீது லாரி ஏறி நின்றது.
image
இந்த விபத்தில் கார் முற்றிலும் உருகுலைந்து லாரிக்கு டியில் சிக்கியது. இக்கோர விபத்தில் காரில் பயணம்செய்த பதர்நிஷா, ஓட்டுநர் கிருஷ்ணசந்தர் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரின்மீது லாரி ஏறி கார் உருக்குலைந்து நின்றதால் காரினை தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு ஜேசிபி வாகனம் மற்றும் கடப்பாரையால் வெட்டி அகற்றினர். பின்னர் உடல்களை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.
image
திருவெண்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு மயிலாடுதுறை மாவட்ட எஸ்பி நிஷா விரைந்து சென்று விபத்து குறித்து விசாரணை நடத்தினார். இந்த விபத்தினால் நாகை – சீர்காழி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.