திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் வரும் பக்தர்கள் ஒவ்வொரு மாத பவுர்ணமி நாட்களிலும் கிரிவலம் செல்வது வழக்கம். பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.
இதில் சித்ரா பவுர்ணமி வழிபாட்டுக்கு 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் இன்றும், நாளையும் சித்ரா பவுர்ணமி கிரிவலம் நடைபெறுகிறது.
திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி அன்று 3,241 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், கிரிவலப் பாதையில் 15 சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் வயது முதிர்ந்த பக்தர்களை அழைத்துச் செல்ல 3 பேட்டரி கார்களும் மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப்பாதை உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் கற்பூரம் ஏற்றுவதற்கும், மலைமீது ஏறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தனிநபர் மற்றும் தொண்டு நிறுவனங்கள், தொண்டு அமைப்புகள் சார்பில் கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்ய 40 இடங்களில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து கிரிவலப் பாதை மற்றும் நகருக்குள் உள்ள பகுதிகளுக்கு செல்ல தனிநபர் ஆட்டோ கட்டணமாக ரூ.30 முதல் ரூ.50 வரை கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.