சிம்பு நடிப்பில் உருவாகி வந்த ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து உள்ளதாக அப்படத்தின் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் அறிவித்துள்ளார்.
‘மாநாடு’ வெற்றிப் படத்திற்கு நடிகர் சிம்பு நடித்து வரும் படம் ‘வெந்து தணிந்தது காடு’. ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ படத்திற்குப் பிறகு, இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் – நடிகர் சிம்பு – இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி 3-வது முறையாக இந்தப் படத்தில் இணைந்துள்ளதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
ஜெயமோகன் எழுதிய ‘அக்னி குஞ்சொன்று கண்டேன்’ கதையை தழுவி எடுக்கப்படுகிறது. இந்தப் படத்தில் டீனேஜ் வயது முதல் மெச்சூர் வயது வரை ஒரு மனிதன் சந்திக்கும் பிரச்னைகள், உணர்வுகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தப் படத்தில் நடிகர் சிம்பு, அந்தந்த வயதுக்கேற்றவாறு பலவிதமான தோற்றங்களில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
Filming completed.
Thank you! #VendhuThanindhathuKaadu@SilambarasanTR_@arrahman@IshariKGanesh @SiddhiIdnani @jeyamohanwriter @NuniSiddhartha @rajeevan69 @editoranthony@Kavithamarai@BrindhaGopal1 @utharamenon5@ashkum19 @SiddiqueActor @NeerajMadhavv @Preethisrivijay pic.twitter.com/ncOsi4bVXe— Gauthamvasudevmenon (@menongautham) April 15, 2022
இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் காரைக்குடி, சென்னை மற்றும் மும்பையில் நடைபெற்றது. ஐசுரி கணேஷ் தயாரிக்கும் இந்தப் படத்தில், இலங்கையைச் சேர்ந்த நடிகை சித்தி இதானி கதாநாயகியாக நடிக்கிறார். மூத்த நடிகையான ராதிகா, சிம்புவிற்கு தாய் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார். மேலும் படப்பிடிப்பு நிறைவடைந்ததையொட்டி, படக்குழு அனைவருக்கும் நன்றி தெரிவித்து, புதிய போஸ்டரையும் கௌதம் வாசுதேவ் மேனன் வெளியிட்டுள்ளார். போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வரும்நிலையில், இந்தப் படம் ஜூன் அல்லது ஜூன் மாதத்திற்குப் பிறகு வெளியாகலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.