நொய்டா : உ.பி. மாநிலம் கவுதம் புத்தா மாவட்டத்தில் புதிதாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 121 ஆக அதிகரித்துள்ளது.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ. ஆட்சி நடக்கிறது. இங்கு கவுதம் புத்தா மாவட்டத்தில் திடீரென கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த இரு தினங்களில் புதிதாக 44 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 15 சிறார்களும் அடங்குவர். இதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 121 ஆக உயர்ந்துள்ளது.
இது குறித்து மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி சுனில் குமார் சர்மா கூறியதாவது:
நொய்டாவில் புதிதாக 15 சிறார்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பள்ளிச் சிறுவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக தகவல் இல்லை. எனினும் நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா நகரங்களில் அனைத்து பள்ளிகளுக்கும் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் சிறுவர்களுக்கு காய்ச்சல் சளி அறிகுறி தென்பட்டால் உடனே தெரிவிக்குமாறு கூறப்பட்டுள்ளது, என்றார்
டில்லியில் கடந்த இரண்டு நாட்களில் கொரோனா பாதிப்பு 118 சதவீதம் உயர்ந்து 299 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து ”தேவைப்பட்டால் பள்ளிகளிலும் கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் அமல்படுத்துவோம்” என டில்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
Advertisement