செல்போன் பறிப்பின் மூலம் மாதம் ரூ.9 லட்சம் சம்பாதித்த பிக்பாக்கெட் கொள்ளையர்கள்

சென்னை:

சென்னையில் பஸ் பயணத்தின் போது செல்போன்களை பிக்பாக்கெட் அடிப்பது தொடர் கதையாகவே உள்ளது. இது தொடர்பாக பொது மக்கள் தரப்பில் இருந்து போலீசுக்கு பல்வேறு புகார்கள் வந்தன.

இதைத்தொடர்ந்து கமி‌ஷனர் சங்கர் ஜிவால் பிக்பாக்கெட் கொள்ளையர்களை பிடிக்க அதிரடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து தென்சென்னை கூடுதல் கமி‌ஷனர் கண்ணன், இணை ஆணையர் பிரபாகரன் ஆகியோரது மேற்பார்வையில் கீழ்ப்பாக்கம் துணை கமி‌ஷனர் கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் ஓடும் பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி வடசென்னை பகுதியை சேர்ந்த கொள்ளை கும்பல் 6 மாதமாக கூட்டாக சேர்ந்து கொள்ளையடித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக கொருக்குபேட்டை ராஜீவ் காந்தி நகரை சேர்ந்த உமாபதி, சரவணன், ஆதி நாராயணபுரம் ரெயில்வே காலணியை சேர்ந்த வினாயகம், அம்பேத்கர் நகரை சேர்ந்த ராஜேஷ், தண்டையார்பேட்டை நேதாஜி நகரை சேர்ந்த உமர் பாரூக் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் உமாபதி, வினாயகம், நரேஷ் ஆகிய 3 பேரும் பிக்பாக்கெட் கொள்ளையர்கள் ஆவர். இவர்கள் 3 பேரும் பஸ்களில் ஏறி செல்போன்களை பிக்பாக்கெட் அடிப்பதை தொழிலாகவே செய்து வந்துள்ளனர். ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட வழித்தடத்தை தேர்வு செய்து 3 பேரும் கைவரிசை காட்டி இருக்கிறார்கள்.

பாரிமுனை-கோயம்பேடு, கிண்டி-கீழ்க்கட்டளை, மேடவாக்கம்-பாரிமுனை, வேளச்சேரி-கோயம்பேடு ஆகிய 5 வழித்தடங்களில் செல்லும் பஸ்களை குறி வைத்து கடந்த 6 மாதமாக 100-க்கும் மேற்பட்ட செல்போன்களை 3 பேரும் பறித்துள்ளனர்.

இவர்கள் எந்த பஸ்சில் செல்போன்களை அடிக்கிறார்களோ அந்த பஸ்சின் பின்னால் ஆட்டோ டிரைவரான சரவணன் மெதுவாக தனது ஆட்டோவை ஓட்டிச் செல்வார். பயணி ஒருவரிடம் பிக்பாக்கெட் அடித்ததும் அடுத்த பஸ் நிறுத்தத்தில் கொள்ளையர்கள் இறங்கி விடுவார்கள். அதன்பின் ஆட்டோ டிரைவர் சரவணனிடம் செல்போனை கொடுத்துவிட்டு மீண்டும் அதே பஸ்சில் ஏறிவிடுவார்கள்.

இதனால் செல்போனை பறிகொடுத்த பயணி கூச்சல் போட்டு பஸ்சை நிறுத்தி அனைவரையும் சோதனை செய்தாலும் செல்போன் சிக்காது என்பதால் இந்த ‘திருட்டு திட்டத்தை’ கொள்ளையர்கள் அரங்கேற்றி இருக்கிறார்கள்.

இப்படி பிக்பாக்கெட் அடிக்கும் செல்போன்களை உமர்பாரூக் வாங்கி விற்பனை செய்து வந்துள்ளார். பிக்பாக்கெட் கொள்ளை கும்பல் விலை உயர்ந்த செல்போன்களை திருடி குறைந்த விலைக்கு விற்பனை செய்துள்ளனர்.

உதாரணத்துக்கு ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை ரூ.35 ஆயிரத்துக்கு விற்கின்றனர். இந்த கொள்ளை கும்பலிடம் இருந்து 108 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள், ஆட்டோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைதான கொள்ளையர்கள் மீது வேப்பேரி போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உதவி கமி‌ஷனர் அரிகுமார், இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் விசாரணை நடத்தி 5 பேரையும் சிறையில் அடைத்தனர்.

கொள்ளை கும்பல் தலைவனாக உமாபதி செயல்பட்டுள்ளார். கொருக்குப்பேட்டையை சேர்ந்த இவர் தனது கூட்டாளிகளான அதே பகுதியை சேர்ந்தவர்களையே சேர்த்துக்கொண்டு செல்போன் பறிப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

எந்த பகுதியில் இன்று கொள்ளையில் ஈடுபடலாம் என்பது பற்றி 4 பேரும் ஓரிடத்தில் கூடி திட்டம் தீட்டுவதை வழக்கமாக வைத்திருந்தனர். கொண்டி தோப்பு, மூலக்கொத்தளம் போன்ற பகுதிகளில் ஒரு இடத்தில் காலையில் ஒன்று சேர்ந்துவிடும் இவர்கள் அதன்பின்னர் கிண்டி, பாரிமுனை, புரசைவாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

திருட்டு செல்போன்களை விற்று அதன் மூலமாக தினமும் ரூ.30 ஆயிரம் வரையில் கொள்ளையர்கள் பணம் சம்பாதித்துள்ளனர் என்றும் இதன்மூலம் அவர்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.9 லட்சம் வரையில் வருவாய் ஈட்டி உள்ளனர்.

இந்த பணத்தை பங்கு போட்டு பிரித்துக்கொண்டு உல்லாச வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள். செல்போன் பறிப்பில் ஈடுபடும் இதுபோன்ற கொள்ளையர்களிடம் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.