பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சொந்த இடங்களுக்குச்சென்ற மக்கள் ,மீண்டும் பிரதான நகரங்களுக்குத் திரும்புவதற்காக மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
இன்று (15) முதல் இந்த பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை பிரதி பொது முகாமையாளர் பண்டுக்க ஸ்வர்ணஹங்ச தெரிவித்தார்.
மேலதிக பஸ்கள் இன்று முதல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தூரப் பிரதேசங்களில் இருந்து கொழும்பு வருவதற்கான தேவையான பஸ் சேவைகளை இன்று தொடக்கம் மேற்கொள்ளுமாறு பிராந்திய முகாமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பஸ்களும் இன்று முதல் சேவையில் ஈடுபடவிருக்கின்றன.
இதேவேளை ,வழமையான ரெயில்களுக்கு மேலதிகமாக இன்று விசேட ரெயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ரெயில்வே பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார்.
ரெயில்வே திணைக்களம் ஏற்கனவே அறிவித்த படி பின்வரும் விசேட கடுகதி ரெயில் சேவைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
காங்கேசன்துறையில் இருந்து கல்கிசை வரையில் நாளை 17 ஆம் திகதி விசேட கடுகதி ரயில் சேவை இடம்பெறவுள்ளது.
காங்கேசன்துறையில் இருந்து இந்த ரயில் இரவு 10.00 மணிக்கு புறப்பட்டு கல்கிசையை காலை 6.00 மணிக்கு வந்தடையவுள்ளது.
இதேபோன்று, பதுளைக்கும் கொழும்பு கோட்டைக்கும் இடையில் நாளை ரயில் சேவை இடம்பெறவுள்ளது.
இந்த ரயில் பதுளையில் இருந்து மாலை 08.00 மணிக்கு புறப்பட்டு காலை 5.50 க்கு கொழும்பு கோட்டையை வந்தடையும்.
பெலியத்தைக்கும் மருதானைக்கும் இடையில் நாளை விசேட கடுகதி ரயில் சேவை இடம்பெறவுள்ளது.