மேற்கு வங்க மாநிலத்தில், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என, பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பூ காட்டமாக தெரிவித்து உள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில், முதலமைச்சர்
மம்தா பானர்ஜி
தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தின் நந்தியா மாவட்டம் ஹன்ஷகில் கிராமத்தைச் சேர்ந்தவர் பஞ்சாயத்து தலைவர்
சமரிந்திர கயாலி
. திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகியான இவரின் மகன் பராஜ்கோபால் (21 வயது). சமரிந்திர கயாலின் மகன் பராஜ்கோபால், கடந்த 5 ஆம் தேதி இரவு தனது பிறந்தநாளை கொண்டாடி உள்ளார்.
விழாவில் அதே கிராமத்தை சேர்ந்த 9 ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி ஒருவரும் பங்கேற்று உள்ளார். அந்த சிறுமியை, பராஜ்கோபால் மற்றும் அவரது நண்பர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் குற்றஞ்சாட்டினர். இதனை தொடர்ந்து கடந்த 10 ஆம் தேதி சிறுமி பெற்றோர் நடந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளனர்.
சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, முதலமைச்சர் மம்தா பானர்ஜி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே, இந்த விவகாரத்தில் பாஜக உண்மை கண்டறியும் குழுவை அமைத்தது. இந்தக் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த வானதி சீனிவாசன், நடிகை குஷ்பூ உள்ளிட்டோர் இடம் பெற்று இருந்தனர்.
இந்நிலையில் இன்று, இந்தக் குழுவினர் ஹன்ஷகில் பகுதிக்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்துப் பேசினர். இதன் பின்னர் செய்தியாளர்களுகுப் பேட்டி அளித்த குஷ்பூ, 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கண்டனத்திற்குரிய கருத்தை பெண் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதற்கு மம்தா பானர்ஜி மன்னிப்பு கோர வேண்டும். மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம். மம்தா பானர்ஜி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என்றார்.
பாஜக எம்.பி ரேகா வர்மா கூறுகையில், “நாங்கள் எங்கள் அறிக்கையை பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவிடம் நாளை சமர்ப்பிப்போம். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை முதலமைச்சர் ஏற்றுக் கொள்ளவில்லை. மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை” என்றார்.