ஜெருசலேம்- ஜெருசலேமில், பாலஸ்தீனர்களுக்கும் போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில், 152 பாலஸ்தீனர்கள் காயமடைந்தனர்.
மேற்காசிய நாடான இஸ்ரேலின் ஜெருசலேம் நகருக்கு, யூதர்களும், முஸ்லிம்களும் உரிமை கொண்டாடி வருகின்றனர். இதனால், யூதர்கள் பெரும்பான்மையினராக உள்ள இஸ்ரேலுக்கும், முஸ்லிம்கள் அதிகம் வாழும் பாலஸ்தீனத்துக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது.கடந்த ஆண்டு, இருநாடுகளுக்கும் இடையில் உள்ள காஸா பகுதியில், இருதரப்பிற்கும் இடையே பயங்கர சண்டை நடந்தது.
அப்போது, இஸ்ரேல் மீது, ‘ஹமாஸ்’ என்ற கிளர்ச்சியாளர்களும் தாக்குதல் நடத்தினர். அதில் இருதரப்பிலும் ஏராளமானோர் உயிரிழந்தனர்.இந்நிலையில், ஜெருசலேமில் உள்ள அல் அக்சா மசூதிக்கு, நேற்று அதிகாலை, ரம்ஜான் மாத சிறப்பு தொழுகைக்காக ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் வந்திருந்தனர். அப்போது, அங்கிருந்த போலீசாருடன் பாலஸ்தீன இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஒரு கட்டத்தில் வன்முறை வெடித்தது.இருதரப்பிற்கும் இடையில் நடந்த சண்டையில், 152 பாலஸ்தீனர்கள் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதற்கிடையே, இதில் தொடர்புடைய, 100க்கும் மேற்பட்டோரை, போலீசார் கைது செய்துள்ளனர்.
Advertisement