வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புஜ்- ”மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லுாரி என்ற கொள்கையை மத்திய அரசு அமல்படுத்தி வருவதால், அடுத்த 10 ஆண்டுகளில் டாக்டர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத வகையில் அதிகரிக்கும்,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
குஜராத்தில், முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு கட்ச் மாவட்டத்தில் உள்ள புஜ்ஜில், 200 படுக்கை வசதிகளுடன் கூடிய பல்நோக்கு மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக நேற்று திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், குஜராத்தில் ஒன்பது மருத்துவக் கல்லுாரிகள் மட்டுமே இருந்தன.ஆண்டுக்கு 1,100 பேர் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேரும் நிலை இருந்தது. இப்போது ‘எய்ம்ஸ்’ மருத்துவக் கல்லுாரி உட்பட, குஜராத்தில் 30க்கும் அதிகமான மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன. ஆண்டுக்கு 6,000 மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்கின்றனர். மத்திய அரசு, மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லுாரி என்ற கொள்கையை அமல்படுத்தி வருவதை அடுத்து இந்த மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
இன்னும் 10 ஆண்டுகளில், நம் நாட்டில் டாக்டர்கள் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு அதிகரிக்கும்.கொரோனா தொற்று பரவல் முழுமையாக ஒழிந்துவிடவில்லை. எனவே, மக்கள் அஜாக்கிரதையாக இருக்கக் கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement