”ஓ இன்டெர்வியூவா..? நான் கடகடனு சொல்றேன்….நீங்க மாத்திக்கிக்கங்க!” என்று ஏகத்துக்கும் வெட்கப்பட்டு, பேச ஆரம்பித்தான்…பேச ஆரம்பித்தார் ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம்!
2022-ன் கவன ஈர்ப்பு சினிமாவாக வலம் வரும் ‘டாணாக்காரன்’ படத்தின் ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம். காவலர் பயிற்சிப் பள்ளியின் ட்ரெய்னிங்கை அப்படியே புழுதி பறக்க… அனல் தெறிக்க படமாக்கி திரையில் ஒளிரவிட்டு, நம் விழிகளை விரிய வைத்தவர்! விகடனின் மதிப்புமிகு முன்னாள் புகைப்படக் கலைஞர்… என் அன்புத்தம்பி!
”வணக்கம் மாதேஷ்… டாணாக்காரனுக்காக வாழ்த்துகள்!” என்று அலைபேசியில் அழைத்து வாழ்த்தியதும், ”நாம ரெண்டு பேரும் சேர்ந்து பண்ணின அஸைண்மெண்ட்ஸ் இப்பவும் ஞாபகம் இருக்கு. வடசென்னைல தண்ணி வண்டி ஓட்டுன முன்னாள் சாராய வியாபாரி 90 வயசு பாட்டியை பேட்டி எடுத்தோமே அண்ணா…சூப்பர்ல..?” என்று நேற்று நடந்த சம்பவம் போல ஏகத்துக்கும் நெகிழ்ந்தான்.
“நான் எடுத்த சில்-அவுட் போட்டோவைத்தான் ஃபேஸ்புக்ல புரொபைலா வெச்சிருந்தீங்க. ஃபேஸ்புக்ல இப்ப நீங்க இல்லை…அதனால அடிக்கடி நாம வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ் மாத்துறப்போ மாத்தி மாத்தி பார்த்துக்கிறோம். ஆனா, பேசத்தான் மாட்டேங்குறோம். நானே பேசணும்னு நினைச்சிட்டே இருந்தேன்… அண்ணா எப்படி இருக்கீங்க?” -அதே புகைப்படக்கார இளவல் மாதேஸ்வரன் கொஞ்சமும் மாறவில்லை. இதோ புகைப்படக் கலைஞன் மாதேஸ்வரன், ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கமாய் மாறிய கதை!
”நான் பிறந்தது நாமக்கல் மாவட்டம் மங்களாபுரம். எனக்கு ஒரு அண்ணன். வீட்டுல நான் கடைக்குட்டிங்கிறதால செம செல்லம். சின்ன வயசுல இருந்து படம் வரையுறதுல ஆர்வம் ஜாஸ்தி. அதனால சென்னை கவின்கலைக் கல்லூரியில பெயிண்டிங் கோர்ஸ் சேர்ந்தேன். அப்போதான் விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தோட அறிவிப்பைப் பார்த்து போட்டோகிராபருக்கு அப்ளை செஞ்சேன். 2006-2007 வருஷத்துல விகடனோட முக்கியமான நிருபர்கள் எல்லோருடனும் அஸைண்மெண்ட் செஞ்சிருக்கேன். அப்போ ஒல்லியா பார்க்கவே பரிதாபமா இருப்பேன். அதனாலேயே விகடன்ல அண்ணன்களோட செல்லப்பிள்ளையா இருந்தேன். நான் வேணும்னு கேட்டு அஸைன்மெண்ட்டுக்கு கூட்டிட்டுப் போறதால எங்கிட்ட இருந்த கேமரவுக்குப் பொருத்தமான லென்ஸ்களை ஃப்ரெண்ட்ஸ்கிட்ட கடன் வாங்கிட்டுப் போய் படமெடுப்பேன். படம் நல்லா வரணும்னு அங்கே இங்கே தாவி போட்டோஸ் எடுப்பேன். ஆனந்த விகடன், ஜூனியர் விகடன், அவள் விகடன், மோட்டார் விகடன், சுட்டி விகடன்னு எல்லா பத்திரிகையிலயும் என்னோட படங்கள் வெளிவந்தது. சுமார் ஒன்றரை வருடங்கள் பிஸியான புகைப்படக்காரனா இருந்த நான் அங்கிருந்து கிளம்பி, அப்படியே ஒரு வருஷம் ஸ்டில் போட்டோகிராஃபரா வேலை செஞ்சேன். நண்பர்களோட காதுகுத்துல ஆரம்பிச்சு பிரபலங்களோட போர்ட்ஃபோலியோ வரை வரிசைகட்டி ஆர்டர் வந்தது.
எனக்கு எப்பவுமே ஒரு இடத்துல தேங்கியிருக்குறது பிடிக்காது. விஷுவல் மீடியா பக்கம் போகணும்னு முடிவெடுத்தேன். என்னோட காலேஜ் ஃப்ரெண்ட் ஒருத்தர் `குங்குமப்பூவும் கொஞ்சும்புறாவும்’ படத்துல ஆர்ட் டைரக்டரா வேலை பார்த்தார். அவரிடம் அந்தப் படத்தோட ஒளிப்பதிவாளர் சித்தார்த் சாரின் நம்பர் வாங்கி நானே போன்ல பேசினேன். அவரும் உடனே நேர்ல வந்து பார்க்கச் சொன்னார். நான் எடுத்த புகைப்படங்கள், ஆனந்த விகடன்ல வந்த போட்டோஸ் எல்லாத்தையும் எடுத்துட்டுப் போனேன். அவர் இன்டெர்வியூலாம் எதுவுமே வைக்கல. உடனே சேர்ந்துக்கச் சொல்லிட்டார். நேரா அரவான், ஜே.கே எனும் நண்பனின் கதை, ஒரு தெலுங்கு படம், வெள்ளை ராஜா வெப் சீரீஸ், அப்புறம் ஆபரேட்டிவ் கேமரா மேனாக ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என பிஸியாகவே இருந்தேன். நடுவுல நண்பர்களோட அழைப்புல பல படங்களுக்கு ஆபரேட்டிவ் கேமரா மேனாக இருந்தேன். என்னைப் பொறுத்தவரை பிஸியா ஓடிட்டே இருக்கணும்னு நினைச்சேன். அப்போ என்னோட `ஷோ ரீல்’ பார்த்துட்டு, எஸ்.ஆர்.பிரபு சாரும் தங்கபிரபாகரன் சாரும் கூப்பிட்டிருந்தாங்க. நேர்ல போய் பார்த்தேன்.
”தமிழ்னு ஒரு டைரக்டர் கதை சொல்வார். போலீஸ் ஸ்டோரி. உடனே ஷூட்டிங் போயிடலாம்!”னு சொன்னாங்க. கனவு மாதிரி இருந்துச்சு. அதுக்கு முன்னாடியே அவங்ககூட ஒரு புராஜெக்ட் பண்றதா இருந்து தள்ளிப் போயிருந்தது. இப்ப செம வாய்ப்புனு நினைச்சுட்டே இயக்குநர் தமிழைப் பார்த்தேன். அவரை நேர்ல பார்த்ததும் பயமா இருந்துச்சு. இருக்காதா பின்னே… அசுரன் படத்துல கரியன் கெட்-அப்ல தாடியோட 6 அடிக்கும் மேலே பார்க்கவே டெரரா இருந்தார். அவர் சொன்ன டாணாக்காரன் கதையை முதல்ல கேக்குறப்போ சத்தியமா உள்வாங்கிக்க முடியலை. காரணம் எனக்கு போலீஸ் டிப்பார்ட்மென்ட் பத்தி எதுவுமே தெரியாது. ஒருவாட்டி என்னோட செல்போன் தொலைஞ்சப்போ ஸ்டேஷனுக்குப் போயி கம்ப்ளைண்ட் கொடுத்ததோட போலீஸுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சரி… இதென்னடா ஈ.டி, ட்ரில், ட்ரெய்னிங், பி.ஆர்.எஸ், பரேடுனு என்னென்னமோ சொல்றாரேனு குழம்பிட்டேன். ஏன்னா மொத்த கதையும் ஒரு கிரவுண்ட்ல நடக்குதுங்கிறதை உள்வாங்கிக்கவே நேரம் எடுத்துச்சு. அப்புறம் தமிழ் சாரே போலீஸா இருந்தவர்ங்கிறதை எடுத்துச் சொன்னார். ராமேஸ்வரத்துல பிறந்து உச்சிப்புளி, சென்னைல ஸ்டேஷன்கள்ல போலீஸா வேலை பார்த்திருக்கார். அறிவாலயம், கலைஞர் வீடுனு பாதுகாப்பு கொடுத்த போலீஸ்காரர், டிராஃபிக் போலீஸா சென்னைல பல இடங்கள்ல வேலை பார்த்திருக்கார், நாமளேகூட சிக்னல்ல அவரை கிராஸ் செஞ்சுருப்போம்னு புரிஞ்சுக்கிட்டேன்.
அவர் கதையை விளக்கின விதம், ஏன் அவர் போலீஸ் துறையை விட்டு சினிமாபக்கம் போனார்னு புரிஞ்சது. அப்புறம் ‘மாதேஷ், நாம மணிமுத்தாறு, ஆவடி பட்டாலியன் ட்ரெய்னிங் போய் பார்க்கலாம் பயப்படாதீங்க!’னு சொன்னார் . நேரம் இல்லாததால திண்டிவனம் பக்கத்துல போலீஸ் ட்ரெயினிங் பள்ளிக்கு கூட்டிட்டுப் போய் காட்டினார். அவங்களோட ட்ரெயினிங் பார்த்து வியந்தேன். செம கதைக்களம்னு புரிஞ்சிடுச்சு. அப்படியே நல்ல வெயில் அடிக்கிற ஒரு கிரவுண்டைத் தேடி லொக்கேஷன் வேட்டைக்குக் கிளம்பினோம். காட்பாடிக்குப் பக்கத்துல ‘கசம்’னு ஒரு ஊருல பள்ளிக்கூட கிரவுண்ட்டை ஃபிக்ஸ் செஞ்சோம். 52 நாட்கள் இடைவிடாமல் ஒரே ஷெட்யூல்ல மொத்தப் படத்தையும் முடிச்சிட்டோம். சென்னைல ஃப்ளாஷ்பேக் சீன், லிவிஸ்டன் சார் நடிச்சதை மட்டும் ரெண்டு நாள் எடுத்தோம். 2019 ஏப்ரல் 24-ல ஆரம்பிச்சு ஜூன் 16-க்குள்ள மொத்தப் படமே முடிஞ்சிருச்சு.
ஷூட்டிங் நடுவே அவ்ளோ கஷ்டம் எட்டிப் பார்த்துச்சு. வரலாறு காணாத வெயிலுக்கு வேலூர் ஃபேமஸ்னு எல்லோருக்குமே தெரியும். ஆனா, க்ளைமாக்ஸ் ஷூட் பண்ணுறப்போ திடீர்னு பேய்மழையும் பேஞ்சது. கிரவுண்ட் பூரா அவ்ளோ தண்ணி! நல்லவேளை ஆர்ட் டிப்பார்ட்மெண்ட் கஷ்டப்பட்டு உதவுனாங்க. போராடி தண்ணிய வெளியேத்தி, காய வெச்சு ஈரம் தெரியாம மண்ணைக் கொட்டி லைட்டிங்லாம் உக்கிரமா செட் பண்ணி வெயில் இருக்குற கன்டினியுட்டியை அப்படியே ஸ்க்ரீன்ல கொண்டு வந்தோம்.
2019 பிப்ரவரி 7-ம் தேதி எனக்கு பொண்ணு பார்த்தாங்க…. பிப்ரவரி 9 நிச்சயதார்த்தாம் முடிச்சு லொக்கேஷன் பார்க்கக் கிளம்பி, ஷூட்டிங்கை முடிச்சு நேரா ஜூலை 11-ம் தேதி கல்யாணத்துல போய் நின்னேன். பொண்ணு வீட்டுக்காரங்க, ‘என்னடா மாப்பிள்ளை இப்படி ஒல்லியா கருத்துப் போயிட்டாரு!’ன்னு ஜெர்க் ஆனாங்க. நல்லவேளை பொண்ணைக் கட்டிக் கொடுத்துட்டாங்க. கருப்பானதுக்கு வெயில் காரணம்னா ஒல்லியானதுக்கு படத்துல விக்ரம் பிரபு உட்பட நடிகர்கள் எல்லோரும் ஓடுனப்போ கேமராமேனா நானும் ஓடி ஓடித்தான் படமாக்கினேன். எங்கூடவே லைட்மேன்களும் பரபரக்க ஓடி வந்தாங்க. என் கையில வெயிட்டான கேமரா இருந்துச்சுன்னா அவங்க கையில லைட்டிங் செட் பண்ண 20×20 ஸ்கிம்மரை தூக்கிட்டு ஓடி வந்தாங்க. ‘என்னப்பா யூனிட்ல எல்லோருக்குமே போலீஸ் டிப்பார்ட்மெண்ட்ல சீட் கொடுத்திருவாங்க போலையே!’னு விக்ரம் பிரபுவே செல்லமா அலுத்துக்கிட்டார். ஒட்டுமொத்த யூனிட்டும் வேலூர்லயே தங்கி ஷூட்டிங் முடிச்சிட்டுதான் சென்னைக்குக் கிளம்பினோம்.
2019-க்குப் பிறகு கொரோனா மட்டும் வரலைனா படம் அப்பவே ரிலீஸாகியிருக்கும். ஆனா, தள்ளிப்போயி ஹாட்ஸ்டார் வாங்கி நேரம் ஒதுக்கி இப்போ ரிலீஸ் பண்ணியிருக்காங்க. நடுவுல ஹிப்ஹாப் ஆதியோட ‘அன்பறிவு’ பண்ணி அது ரிலீஸாகிடுச்சு. தாமதமானாலும் டாணாக்காரனுக்கு மக்கள் மத்தியில நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு. கூடவே ஒளிப்பதிவுக்கும் நல்ல பெயர் கிடைச்சது எனக்கு பெர்சனலா சந்தோஷமா இருக்கு. முதல் படத்துக்குப் பட்ட கஷ்டமெல்லாம் மறந்து போச்சு!
`அரவான்’ படத்துலயே அசிஸ்டெண்ட் கேமராமேனா வெயிலைத் தாங்கிக்க முடியாம மயக்கம் போட்டுலாம் விழுந்தேன். க்ளூக்கோஸ்லாம் ஏத்திட்டு வந்து வேலை பார்த்தேன். அந்த வெயில் அனுபவம் டாணாக்காரனுக்கு கைகொடுத்துச்சு. உண்மையிலேயே எனக்கு டயர்டே ஆகலை. காரணம் டீம் ஒர்க். எல்லோரும் செமையா ஒத்துழைச்சாங்க. இப்போ இந்த வெற்றி இன்னும் எங்க நட்பை உறுதியாக்கியிருக்கு!” என்று சொல்லும் மாதேஷ் மாணிக்கத்திடம் அடுத்த புராஜெக்ட் பற்றிக் கேட்டதும், ”சசிக்குமார் சாரோடு அயோத்தியா பண்றேன். இதுவும் வித்தியாசமான…ஒளிப்பதிவுக்கு சவால் நிறைஞ்ச ஸ்கிரிப்ட்!” என்று தௌஸண்ட் வாட்ஸ் பல்பை முகத்தில் ஒளிரவிடுகிறார்.
வாழ்த்துகள் மாதேஷ் மாணிக்கம்!