புதுமைக்கும், சவால்களுக்கும் பெயர்போன எலான் மஸ்க் டெஸ்லா-வில் துவங்கி போரிங் கம்பெனி வரையில் வியக்க வைக்கும் பல வெற்றியைப் பதிவு செய்திருந்துள்ளார். இதனாலேயே எலான் மஸ்க்-ஐ பல கோடி மக்கள் தொடர்ந்து கவனித்து வருகிறார்கள்.
இந்நிலையில் எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை மொத்தமாகக் கைப்பற்ற அறிவித்த பின்பு எலான் மஸ்க் செய்வது சரியா தவறா எனச் சந்தேகம் எழும் அளவிற்குத் தற்போது சூழ்நிலை மாற்றியுள்ளது.
டிவிட்டர் பணயக் கைதியல்ல.. எலான் மஸ்க் அறிவிப்பால் கடுப்பான பராக் அகர்வால்..!
எலான் மஸ்க்
எலான் மஸ்க் சமுக வலைத்தளத்தில் சுதந்திர பேச்சுக்கு அதிகளவிலான இடம் அளிக்க வேண்டும் என்பதற்காக, தான் அதிகம் பயன்படுத்தும் டிவிட்டர் நிறுவனத்தைக் கைப்பற்ற முடிவு செய்து ஒரு பங்கை 54.02 டாலர் வீதம் மொத்தம் 43 பில்லியன் டாலர் என்ற மிகப்பெரிய தொகைக்கு வாங்க தயார் என அறிவித்துள்ளார்.
43 பில்லியன் டாலர் டிவிட்டர்
இதில் முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டியது, தற்போது டிவிட்டர் நிறுவனத்தை டெஸ்லா நிறுவனம் வாங்கவில்லை, எலான் மஸ்க் தனது சொந்த பணத்தில் வாங்க முடிவு செய்துள்ளார். 43 பில்லியன் டாலர் மதிப்புடைய டிவிட்டரைக் கைப்பற்ற எலான் மஸ்க் எப்படிப் பணத்தைத் திரட்டப்போகிறார் என்பது தான் தற்போது டெஸ்லா முதலீட்டாளர்களின் முக்கியமான கேள்வியாக எழுந்துள்ளது.
250.6 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு
எலான் மஸ்க் உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் இவரிடம் ஒரு சொந்த வீடு கூட இல்லை என்பது தான் உண்மை. இவரின் 250.6 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு அனைத்தும் டெஸ்லா பங்குகளைச் சார்ந்து தான் உள்ளது.
வெறும் 3 பில்லியன் டாலர்
மேலும் ப்ளூம்பெர்க் கணக்கின் படி எலான் மஸ் கடந்த ஆண்டில் டெஸ்லா பங்குகளை விற்பனை செய்து வைத்திருந்த 3 பில்லியன் டாலரில் தற்போது 2.6 பில்லியன் டாலர் செலவு செய்து டிவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கிய நிலையில் மீதம் சிறிய அளவிலான பணத்தை மட்டுமே கையில் வைத்துள்ளார்.
டெஸ்லா பங்குகள் விற்பனை
இந்த நிலையில் 43 பில்லியன் டாலர் மதிப்பிலான டிவிட்டர் நிறுவனத்தைக் கைப்பற்ற கிட்டதட்ட சுமார் 36 பில்லியன் டாலர் அளவிலான திரட்ட வேண்டும். இந்தப் பணத்தைத் திரட்ட கட்டாயம், எலான் மஸ்க் தன்னிடமும் இருக்கும் டெஸ்லா பங்குகளை விற்பனை செய்ய வேண்டிய நிலை தான் வரும்.
5ல் 1 பங்கு விற்பனை
36 பில்லியன் டாலருக்கு எலான் மஸ்க் தன்னிடம் இருக்கும் டெஸ்லா பங்குகளில் 5ல் 1 பங்கை விற்பனை செய்ய வேண்டும், அதாவது சுமார் 36.5 மில்லியன் பங்குகளை விற்பனை செய்ய வேண்டும். இவ்வளவு பெரிய பங்கு விற்பனை டெஸ்லா-வின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும்.
எதிர்காலத் திட்டம் என்ன
குறிப்பாக டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ-வாக இருக்கும் எலான் மஸ்க் டெஸ்லா மீது இருக்கும் அர்ப்பணிப்பு, எதிர்காலத் திட்டம் மற்றும் நிலைப்பாடு போன்ற அனைத்தின் மீது தற்போது கேள்வி எழுந்துள்ளது. இதனால் டெஸ்லா பங்குகள் ரீடைல் சந்தையில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டுப் பங்கு விலை சரியலாம்.
அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதை
இதனால் டெஸ்லா நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் படிப்படியாக வெளியேறும் வாய்ப்பு உள்ளது. அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக டிவிட்டர் நிறுவனத்திற்கு ஆசைப்பட்டுத் தங்க முட்டை போடும் டெஸ்லா-வை இழக்க வேண்டுமா என்பது தான் அனைவரின் கேள்வி.
யார் அடுத்தது..?
அனைத்திற்கும் மேலாக டெஸ்லா நிறுவனம் இன்று வரையில் எலான் மஸ்க் தான் ஒற்றை முகாந்திரமாக இயங்கி வருகிறது. எலான் மஸ்க்-கிற்குப் பின்பு யார் என்பது குறித்துச் சிறிய அளவிலான தகவல்கள் கணிப்புகள் முதலீட்டாளர்களுக்குத் தெரியாத நிலையில் எலான் மஸ்க்-ன் 5ல் ஒரு பங்கு விற்பனை உண்மையில் பயமுறுத்துகிறது.
Elon Musk needs to sell 20 percent Tesla stake to buy Twitter; Is it really worth
Elon Musk needs to sell 20 percent Tesla stake to buy Twitter; Is it really worth டிவிட்டர் மோகம்.. டெஸ்லா-வுக்கு வேட்டு வைக்கும் எலான் மஸ்க்..!