புதுடெல்லி: டெல்லியில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அங்கு பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் இன்று வெளியிடப்படுகின்றன
நாடு முழுவதும் கரோனா 3-வது அலையின் தாக்கம் கணிசமாக குறைந்து வருகிறது. இதனால் வழக்கமான முறைக்கு இயல்பு வாழ்க்கை மாறி வருகிறது. முககவசம் அணிவது சட்டரீதியாக கட்டாயம் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டு விட்டது.
இந்தநிலையில் உருமாறிய கரோனா எக்ஸ்இ வைரஸ் சீனா உட்பட பல நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவிலும் அந்த வைரஸ் பரவி பாதிப்பை ஏற்படுத்தும் என்றஅச்சம் எழுந்துள்ளது.
‘‘கரோனா பிரச்சினை முடியவில்லை. எப்போது புதிய வைரஸ் பரவும் என்பது யாருக்கும் தெரியாது. எனவே கரோனாவுக்கு எதிரான போரை மக்கள் கைவிடக்கூடாது’’ என்று மத்திய அரசும் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் வாராந்திர பாசிட்டிவ் சதவிகிதம் குறைந்துவந்தாலும், ஹரியாணா, டெல்லி, குஜராத் உட்பட சில மாநிலங்களில் கரோனா அதிகரித்து வருகிறது.
டெல்லியில் கடந்தவாரம் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் 26 சதவீதம் அதிகரித்துள்ளனர். அங்கு ஒரு வாரத்தில் 943 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு முந்தைய வாரத்தில் 751 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். டெல்லியில் தினசரி பாசிட்டிவ் ஒரு சதவிகிதத்துக்கும் அதிகமாக உள்ளது.
அதேபோல் அருகில் உள்ள ஹரியாணாவிலும் தொற்று அதிகரித்துள்ளது. அங்கு கடந்த வாரம் 514 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு முந்தைய வாரத்தில் 344 பேருக்கு தொற்று ஏற்பட்டிருந்தது.
குஜராத்தில் கடந்த 3 நாட்களில் மட்டும் 115 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அங்கு அதற்கு முந்தைய வாரத்தில் 61 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அந்த நிலை கடந்த வாரம் 89 சதவீதம் பாதிப்பு அதிகரித்துள்ளது புள்ளிவிவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
டெல்லியில் கரோனா பாதிப்புகள் குறைந்த சூழலில் கடந்த பிப்ரவரி 28-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. அது முதல் மாணவர்கள் வகுப்புகளுக்கு செல்ல தொடங்கினர்.
தற்போது டெல்லியில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தெற்கு டெல்லியில் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியர் மற்றும் மாணவருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால், அந்த வகுப்பில் இருந்த மாணவர்கள் உடனடியாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுபற்றி டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கூறுகையில் ‘‘கரோனா பாதிப்புகள் லேசான அளவில் அதிகரித்து உள்ளன. ஆனால், மருத்துவமனையில் சேருவது அதிகரிக்கவில்லை. அதனால், நாம் கவலை கொள்ள வேண்டாம். அச்சமடைய தேவையில்லை. ஆனால், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கரோனா வைரஸ் உள்ள சூழலில், அதனுடன் வாழ நாம் பழகி கொள்ள வேண்டும். நிலைமையை தொடர்ந்து நாங்கள் கண்காணித்து வருகிறோம். பள்ளிகளுக்கான ஒரு பொதுவான வழிகாட்டு நெறிமுறைகள் இன்று வெளியிடப்படும்’’ எனக் கூறியுள்ளார்.