நாசிக்: மஹாராஷ்டிராவில் கிராம பெண்கள் தண்ணீர் பற்றாக்குறையால் கிணற்றில் இறங்கி ஒவ்வொரு டப்பாவாக இறைக்கும் காட்சி வைரலாகியுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக்கின் ரோஹிலே கிராமத்தில் கடும் தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இதன் வெளிப்பாடாக தங்கள் குடியிருப்பில் இருந்து பெண்கள் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று அங்குள்ள கிணற்றில் உள்ளிறங்கி ஒவ்வொரு சிறிய டப்பாவாக இறைத்து கயிறு கட்டி தண்ணீர் எடுக்கின்றனர். இந்த துயரமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கிராமத்தினர் கூறுகையில், ‛எங்கள் கிராமத்தில் தண்ணீர் வசதி இல்லாததால் சுமார் 2 கி.மீ நடந்து சென்று கிணற்றில் இறங்கி தண்ணீர் எடுக்க வேண்டியுள்ளது. சில சமயங்களில் சில பெண்கள் கிணற்றினுள் விழுந்து விடுகின்றனர். குடிநீருக்காக நாள்தோறும் அலையும் அவலத்திற்கு தீர்வு காண வேண்டும்’ என கோரிக்கை விடுத்தனர்.
இது குறித்து நீர்பாசத்துறை பொறியாளர் அல்கா அஹிர்ராவ் கூறுகையில், ‛நாசிக்கில் கடந்த ஆண்டை விட தண்ணீரின் நிலை சிறப்பாக உள்ளது. கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கோரிக்கையை பெற்றுதான் குடிநீர் தேவைகள் மற்றும் பிற நடவடிக்கைகளுக்கு விநியோகிப்பதற்கான தண்ணீரின் அளவை முடிவு செய்கிறோம். வரும் ஜூன் மாதம் வரை தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது’ என்றார்.
Advertisement