ராமேசுவரம்: தமிழகத்தில் 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் நேற்று நள்ளிரவு முதல் தொடங்கியது. இதனால் 15 ஆயிரம் விசைப்படகுகள் மீன்பிடித் துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தின் கிழக்கு கடல் பகுதியில் மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன்வளத்தைப் பாதுகாத்திடும் வகையிலும் ஏப். 15 முதல் ஜுன் 14 வரை 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது.
இந்நாட்களில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகளை உபயோகப்படுத்தி மீன்பிடிக்கக் கூடாது என்று தமிழக மீன்வளத் துறை அறிவித்துள்ளது.
15 ஆயிரம் விசைப்படகுகள்
அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், சென்னை, திருவள்ளுர் உள்ளிட்ட 14 மாவட்டங்களைச் சேர்ந்த 15ஆயிரம் விசைப்படகுகள் மீன்பிடித்துறைமுகங்களில் நிறுத்திவைக்கப்பட்டு நங்கூரமிடப்பட்டுஉள்ளன.
இந்த ஆண்டு தடைக்கால நிவாரணத் தொகை ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.6 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1.77 லட்சம் மீனவக் குடும்பங்களுக்கு தலா ரூ.6,000 வீதம் தடைக்கால நிவாரணம் வழங்கப்பட உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் வாரந்தோறும் திங்கள், புதன்,சனிக்கிழமைகளில் மட்டுமே விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்வது வழக்கம். இந்தமுறை மீன்பிடித் தடைக்காலம்வியாழக்கிழமை (நேற்று) நள்ளிரவுமுதல் அமலுக்கு வருவதால்,நேற்று முன்தினத்தில் இருந்தே(புதன்கிழமை) யாரும் கடலுக்குச் செல்லவில்லை.
இம் மாவட்டத்தில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, வாலிநோக்கம், தொண்டி, எஸ்.பி.பட்டினம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் 1,500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிஇறங்குதளங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் 33 ஆயிரம் மீனவக் குடும்பங்களுக்கு தலா ரூ.6,000 தடைக்கால நிவாரணமாக வழங்கப்பட உள்ளது.
இந்த 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலத்தில் மீனவர்கள் தங்களின் விசைப்படகுகளை பராமரிக்கும் பணிகளையும், வலையை சீரமைக்கும் பணியிலும் ஈடுபட உள்ளனர்.