தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடல் பகுதியில் மீன்பிடி தடை காலம் அமலுக்கு வந்துள்ளது.
கோடை காலங்களில் மீன்களின் இனப்பெருக்கம் அதிகம் நடைபெறும். இக்காலங்களில் மீன்கள் கடலுக்கு அடியில் உள்ள பாறைகளில் முட்டையிட்டு குஞ்சுகள் பொரிக்கும். விசைப்படகுகள் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் போது படகுகள் மற்றும் வலைகளில் அடிப்பட்டு மீன் குஞ்சுகள் அழியும் நிலை உள்ளது, எனவே இக்காலங்களில் கடலில் மீன்பிடிக்க அரசு தடை விதித்துள்ளது.
இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடல் பகுதியில் மீன்பிடி தடை காலம் அமலுக்கு வந்துள்ளது. மீன்களின் இனப்பெருக்கத்துக்கு ஏதுவாக ஜூன் 15-ஆம் தேதி வரை 60 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமுல்படுத்தப்படும். இதனால் கன்னியாகுமரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களை சேர்ந்த 15 ஆயிரம் விசைப்படகுகள் மீன்பிடி துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை ரூ 5000 இருந்து ரூ. 6000 உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1.77 லட்சம் மீனவ குடும்பங்களுக்கு தலா 6 ஆயிரம் வீதம் மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கப்பட உள்ளது.