டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாட்டின் தலைநகர் டெல்லியில், கொரோனா வைரஸ் முதல் அலை, இரண்டாம் அலை மற்றும் மூன்றாம் அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஊரடங்கில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை அடுத்து, கொரோனா பரவல் குறைந்து வந்தது. இதை அடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டன.
இந்நிலையில், டெல்லியில், கடந்த சில நாட்களாக, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், சுமார் 325 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது கடந்த 40 நாட்களில் பதிவாகாத அதிகபட்ச எண்ணிக்கையாகும். மேலும், கொரோனா பாசிட்டிவ் விகிதம் 2.39 ஆக அதிகரித்து உள்ளது.
டெல்லியில், கடந்த ஒரு வாரத்தில், கொரோனா பாசிட்டிவ் விகிதம் 0.5 சதவீதத்தில் இருந்து 2.39 சதவீதமாக அதிகரித்துள்ளது. எனினும், கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, வரும் 20 ஆம் தேதி, கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக,
டெல்லி
பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர். அப்போது, நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்படக் கூடும் என்றும், ஊரடங்கில் கட்டுப்பாடுகள் அமலாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.