இளம்பெண் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “நேற்று இரவு ஈ.சி.ஆர் சாலையில் பணியிலிருந்த காவலர் ஒருவர் எங்களிடம் தரக்குறைவாகப் பேசினார். நானும் எனது நண்பரும் அலுவலகம் முடிந்து கடற்கரையில் அமர்ந்திருந்தோம். எங்களுக்குக் கடற்கரையில் அனுமதிக்கப்பட்ட நேரம் குறித்துத் தெரியாது. அப்போது அங்கு பணியிலிருந்த காவலர் ஒருவர் எங்களிடம் குற்றவாளிகளைப் போலவும், தீவிரவாதிகளைப் போலவும் வெறுப்பைக் காட்டினார்” என்றும்.
மேலும், “இரவு 10 மணிக்கு மேல் வட இந்தியாவில் போய் சுற்றித் திரியுங்கள் என்று மரியாதையைக் குறைவாகப் பேசினார். தமிழ் பேசத் தெரியாது என்பதற்காக, என்னை வட இந்தியர் என்று சொல்வதா? எங்களின் பதில்களைக் கேட்காமல், வழக்கு பதிவு செய்துவிடுவேன் என்று மிரட்டினார். இது சாதாரண விஷயம் அல்ல. நான் குற்றவாளியும் இல்லை என்பதைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்” என்று பதிவு செய்திருந்தார்.
பெண் ஒருவரிடம் காவலர் மரியாதைக் குறைவாக நடந்துகொண்ட விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் பேசு பொருளானது. இந்த நிலையில், அந்த பெண்ணின் ட்விட்டர் பதிவுக்கு பதிலளித்த தமிழக கால்வதுறை இயக்குநர் சைலேந்திர பாபு, “பணியிலிருந்த காவலர், பொறுப்பற்ற வகையில் நடந்து கொண்டதற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். இதுகுறித்து முழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பதிவிட்டிருக்கிறார்.