விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே இருசக்கர வாகனத்தில் கவனக்குறைவாக தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற வடமாநில இளைஞர்கள் மீது இளநீர் ஏற்றிச் சென்ற லாரி மோதி இழுத்துச் சென்றதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் உட்பட 3 பேர் கட்டிட வேலைக்காக ஒரே பைக்கில் திண்டிவனத்தில் இருந்து விழுப்புரம் நோக்கிச் சென்றுள்ளனர்.
ஜக்காம் பேட்டை சந்திப்பு அருகே நெடுஞ்சாலையை அவர்கள் கடக்க முயன்றபோது, திருச்சியிலிருந்து சென்னைக்கு இளநீர் ஏற்றிக் கொண்டு அதிவேகமாக லாரி ஒன்று வந்துள்ளது.
லாரி அருகில் வந்துவிட்டதைப் பார்த்ததும் பதற்றமடைந்த வடமாநில இளைஞர், முன்னே செல்வதா, பின்னே செல்வதா என சில விநாடிகள் யோசித்துவிட்டு முன்னோக்கிச் சென்றுள்ளார்.
அதேநேரம் லாரி ஓட்டுநரும் இடதுபுறம் திரும்புவதா, வலதுபுறம் திரும்புவதா எனத் தடுமாறி, இருசக்கர வாகனத்தின் மீது மோதினார். இதில் சில அடி தூரம் இருசக்கர வாகனம் இழுத்துச் சென்றதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 15 வயது சிறுவன் லேசான காயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.